என்ன இதெல்லாம்? நல்லா ஆடினாலும் வேண்டாம்.. இளம் வீரரை நீக்க ஐடியா கொடுத்த ஜாம்பவான்!!
சிட்னி : இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வென்றாலும் பெரும் தலைவலியில் சிக்கித் தவிக்கிறது.
ஆம், மூன்றாவது டெஸ்டில் அணியில் மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
சரியாக ஆடாத இரு வீரர்களை நீக்க வேண்டும் என பலரும் கூறி வரும் நிலையில், நன்றாக ஆடிய ஷுப்மன் கில்லை நீக்கும் வகையில் ஒரு யோசனையை கூறி உள்ளார் சுனில் கவாஸ்கர்.

நான்கு துவக்க வீரர்கள்
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய டெஸ்ட் அணியில் நான்கு துவக்க வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். மயங்க் அகர்வால், ப்ரித்வி ஷா, ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் என அந்த நான்கு பேரில் மூன்று பேர் கடந்த ஒரு போட்டிகளில் ஆடி உள்ளனர்.

சிறப்பாக ஆடிய ஒரே வீரர்
ப்ரித்வி ஷா மிக மோசமான பார்மில் இருப்பதை முதல் டெஸ்ட் போட்டியில் நிரூபித்தார். மயங்க் அகர்வால் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். ஷுப்மன் கில் இரண்டாவது டெஸ்டில் அறிமுகம் பெற்றதோடு முதிர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றார்.

ரோஹித் வருகை
இந்த நிலையில் மற்றொரு துவக்க வீரரான ரோஹித் சர்மா மூன்றாவது மற்றும் நான்காவது டெஸ்டில் பங்கேற்க தயாராகி வந்துள்ளார். அவரை எப்படி அணியில் தேர்வு செய்வது என்ற குழப்பமும் ஏற்பட்டுள்ளது. அவரை துவக்க வீரராக ஆட வைத்தால் யாரை நீக்குவது என்ற சிக்கல் உள்ளது.

மயங்க் அகர்வாலுக்கு வாய்ப்பு
இந்த நிலையில், சுனில் கவாஸ்கர் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வாலை துவக்க வீரராக ஆட வைக்க வேண்டும் என உறுதியாக கூறி உள்ளார். மயங்க் அகர்வால் இரண்டு போட்டிகளில் மட்டுமே சரியாக ஆடவில்லை. அதற்கு முன் நன்றாக ஆடி உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஷுப்மன் கில் நிலை
இந்த நிலையில் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே நம்பிக்கை அளிக்கும் வகையில் ஆடிய ஷுப்மன் கில் நிலை என்ன? என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை மிடில் ஆர்டரில் ஆட வைக்கவும் வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கும் கேஎல் ராகுல் பெயர் அடிபடுவதால் அவர் நீக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications