IND vs AUS: உலகிலேயே எந்த வீரரும் செய்யாத மெகா சாதனையை செய்த அபிஷேக் சர்மா.. அதிவேக 1000 ரன்கள்
பிரிஸ்பேன்: உலகின் நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனான இந்தியாவின் அபிஷேக் சர்மா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் மாபெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டி20 போட்டிகளில், குறைந்த பந்துகளைச் சந்தித்து 1000 ரன்களைக் கடந்த வீரர் என்ற புதிய உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நடைபெற்றபோது, இந்த இமாலயச் சாதனையை அவர் நிகழ்த்தினார். 2024-ம் ஆண்டு இந்தியாவிற்காக அறிமுகமான, 24 வயதான அபிஷேக் சர்மா, இந்தப் போட்டிக்கு முன்பு வரை 989 சர்வதேச டி20 ரன்களை எடுத்து இருந்தார்.

1000 டி20 ரன்களை எட்ட அவருக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. இந்திய இன்னிங்ஸின் நான்காவது ஓவரில் அந்த மைல்கல்லை எட்டியபோது, அவர் புதிய உலக சாதனையை உருவாக்கினார். உலக அளவில் குறைந்த பந்துகளில் 1000 சர்வதேச டி20 ரன்களை எட்டிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதற்கு முன்பு, இந்த உலக சாதனை இந்தியாவின் தற்போதைய டி20 கேப்டனான சூர்யகுமார் யாதவின் பெயரில் இருந்தது. அவர் 1000 ரன்களைக் கடக்க 573 பந்துகளை எடுத்துக்கொண்டார். தற்போது, தனது சக வீரரின் சாதனையை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார்.
டி20-யில் அதிவேகமாக 1000 ரன்களை எட்டிய வீரர்கள் (குறைந்த பந்துகள் அடிப்படையில்):
- அபிஷேக் சர்மா (இந்தியா) - 528 பந்துகள்
- சூர்யகுமார் யாதவ் (இந்தியா) - 573 பந்துகள்
- பில் சால்ட் (இங்கிலாந்து) - 599 பந்துகள்
- கிளென் மேக்ஸ்வெல் (ஆஸ்திரேலியா) - 604 பந்துகள்
- ஃபின் ஆலன் (நியூசிலாந்து) - 609 பந்துகள்
மேலும் சில சாதனைகள்
இளம் இந்திய வீரர்: 25 வயது மற்றும் 65 நாட்களில் 1000 டி20 ரன்களைக் கடந்ததன் மூலம், இந்த மைல்கல்லை எட்டிய இளம் இந்திய வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
கோலியின் சாதனையைச் சமன் செய்தார்: போட்டிகளின் அடிப்படையில், அபிஷேக் சர்மா தனது 29வது போட்டியில் 1000 ரன்களைக் கடந்துள்ளார். இதன் மூலம், டி20-களில் குறைந்த போட்டிகளில் 1000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை கடந்த இந்திய வீரர்கள்:
- விராட் கோலி - 29 போட்டிகள்
- அபிஷேக் சர்மா - 29 போட்டிகள்
- கே.எல். ராகுல் - 32 போட்டிகள்
- சூர்யகுமார் யாதவ் - 33 போட்டிகள்
உலகக்கோப்பையில் தோற்றவுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை அனுப்பிய மெசேஜ்.. நெகிழ்ந்து போன ஜெமிமா
டி20 கிரிக்கெட்டில் 1000 ரன்களைக் கடந்த 12வது இந்திய வீரர் என்ற பெருமையையும் அபிஷேக் சர்மா பெற்றுள்ளார். தனது அதிரடியான ஆட்டத்தால் குறுகிய காலத்திலேயே டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த அவர், தற்போது உலக சாதனை படைத்து இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சூப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications