உலகக்கோப்பையில் தோற்றவுடன் ஆஸ்திரேலிய வீராங்கனை அனுப்பிய மெசேஜ்.. நெகிழ்ந்து போன ஜெமிமா
மும்பை: 2025 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்து இருந்தது. அந்த தோல்வியால் மனம் உடைந்த நிலையிலும், ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் அன்னபெல் சதர்லேண்ட், இந்திய வெற்றிக்கு காரணமாக இருந்த ஜெமிமா ரோட்ரிக்ஸுக்கு அனுப்பிய ஒரு குறுஞ்செய்தி, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதை படித்துத் தான் வாயடைத்துப் போனதாக ஜெமிமா கூறியுள்ளார்.
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில், மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிகபட்ச ஸ்கோரான 338 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்து இந்தியா சாதனை படைத்தது. அந்தப் போட்டியில் ஜெமிமா அடித்த 127 ரன்கள் இந்த வரலாற்று வெற்றிக்கு காரணமாக இருந்தது. இந்த வெற்றியின் மூலம், உலகக்கோப்பை தொடரில் 16 போட்டிகளாகத் தொடர்ந்த ஆஸ்திரேலியாவின் வெற்றிப் பயணத்திற்கும் இந்தியா முற்றுப்புள்ளி வைத்தது.

இந்தத் தோல்வி ஆஸ்திரேலிய அணிக்குப் பேரதிர்ச்சியாக அமைந்தாலும், சதர்லேண்ட் தனது விளையாட்டு உணர்வை வெளிப்படுத்தத் தவறவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணி வெளியிட்ட வீடியோவில் இதுகுறித்து பேசிய ஜெமிமா, "போட்டி முடிந்த பிறகு, அரையிறுதியில் தோற்றது அவர்களுக்கு மிகுந்த மனவேதனையை அளித்திருக்கும். ஆனாலும், சதர்லேண்ட் எனக்கு ஒரு மெசேஜ் அனுப்பியிருந்தார். அதில், 'இந்தத் தொடர் முழுவதும் நீ வெளிப்படுத்திய குணம் அபாரமானது. இன்றைய தருணத்திற்கு நீ முற்றிலும் தகுதியான நபர்' என்று குறிப்பிட்டிருந்தார்" என்று கூறினார்.
இந்தச் செய்தியால் தான் மிகவும் நெகிழ்ந்து போனதாக ஜெமிமா குறிப்பிட்டார். "அந்த மெசேஜைப் பார்த்து, 'என்ன ஒரு மனிதர்!' என்று நினைத்தேன். அவர்கள் தங்களின் மிக மோசமான தோல்வியை அப்போதுதான் சந்தித்திருந்தனர். ஆனாலும், அந்த நேரத்தில் நாங்கள் எதிரணியாக இருந்தபோதிலும், ஒரு தோழியாக என்னை ஊக்குவிக்க முன்வந்தார். அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை வந்துவிட்டது" என்றார் ஜெமிமா.
மகளிர் ஐபிஎல் (WPL) தொடரில், ஜெமிமா மற்றும் சதர்லேண்ட் இருவரும் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக ஒன்றாக விளையாடி வருகின்றனர். 2026 மகளிர் ஐபிஎல் சீசனுக்கானஅணியில் ஷஃபாலி வர்மா, மரிசான் கேப் ஆகியோருடன் இவர்களும் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில் தனது டெல்லி கேபிடல்ஸ் அணியின் சக வீராங்கனையைப் பாராட்டிய ஜெமிமா, "சதர்லேண்ட் ஒரு சூப்பர் ஸ்டார். இப்போதைய நிலையில், மகளிர் கிரிக்கெட்டின் டாப் 3 ஆல்-ரவுண்டர்களில் அவரும் ஒருவர் என்று சொல்வேன் - ஒருவேளை சிறந்தவராகவும் இருக்கலாம். அவர் ஒரு உண்மையான முன்னுதாரணம்" என்றார்.
இந்த வரலாற்று வெற்றிக்குப் பிறகு, அதே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி தங்களது முதல் உலகக் கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைத்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications