பெர்த்: விராட் கோலி, ரோஹித் சர்மா என இருபெரும் ஜாம்பவான்களின் ஆட்டத்தைக் காண வேண்டும் என்ற கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அத்தனை எதிர்பார்ப்புகளும், சில நிமிடங்களிலேயே சுக்குநூறாக உடைந்து போனது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், கோலி 'டக் அவுட்' ஆக, ரோஹித் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, இந்திய ரசிகர்கள் கடும் ஏமாற்றத்திலும், கோபத்திலும் மூழ்கினர். சமூக வலைதளங்கள் முழுவதும், "இதைப் பார்க்கவா இவ்ளோ நாள் காத்திருந்தோம்!" என்ற மீம்ஸ்களும், விமர்சனங்களும் நிறைந்து வழிகின்றன.
தீபாவளியை முன்னிட்டு, ஞாயிறு அன்று காலை "இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக" கண்ணப்பா திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. அந்த படத்தை கூட பார்க்காமல் விராட் கோலி, ரோஹித் சர்மா பேட்டிங்கை பார்க்கலாம் என இந்திய ரசிகர்கள் ஆவலாக காத்திருந்தனர். ஆனால், இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் அந்த படத்தையே முழுதாக பார்த்து இருக்கலாம் என மீம்ஸ்கள் பறக்கின்றன.

தனது 500-வது சர்வதேசப் போட்டியில் களமிறங்கிய ரோஹித், தேவையே இல்லாமல் வெளியே சென்ற பந்தைத் தொட்டு, 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இது ரசிகர்களுக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி அளித்தது.
ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் ஒருநாள் 'டக் அவுட்டை' பதிவு செய்து, 8 பந்துகளைச் சந்தித்து, ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இது ரசிகர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையையும் தகர்த்தது.
கேப்டனாக முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய சுப்மன் கில்லும் 10 ரன்களில் ஆட்டமிழக்க, இந்தியாவின் டாப் ஆர்டர் சீட்டுக்கட்டுப் போலச் சரிந்தது. இந்தியாவின் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் சேர்ந்து எடுத்த ரன்கள் வெறும் 18. மூவரும் ஒன்றாக ஆடிய ஒருநாள் போட்டியில், இதுவே அவர்கள் எடுத்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோராகும்.
இந்த படுமோசமான தொடக்கத்தால், கோபமும், ஏமாற்றமும் அடைந்த ரசிகர்கள், சமூக வலைதளங்களில் தங்களது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து வருகின்றனர். "ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கே எழுந்து, ரோஹித் 8(14), கோலி 0(8) ஆட்டத்தைப் பார்க்கவா?" என்று ஒரு ரசிகர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
"கோலி, ரோஹித் ஆட்டத்தைப் பார்க்கும் அகர்கர் மற்றும் கம்பீர்" என்று குறிப்பிட்டு, அவர்கள் அதிர்ச்சியடைந்திருப்பது போலக் கிண்டலாக மீம்ஸ்கள் ஒருபுறம் பறக்கின்றன. "கோலி தனது ஆஃப்-ஸ்டம்ப் பலவீனத்திலிருந்து இன்னும் மீளவில்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது ஓய்வுக்குக் காரணமான அதே தவறை, மீண்டும் ஆஸ்திரேலிய மண்ணில் செய்கிறார்" என்று பலரும் அவரது ஷாட் செலக்ஷனை விமர்சித்து வருகின்றனர்.
"ரோஹித் சர்மா போன்ற வீரர்களால், யஷஸ்வி ஜெய்ஸ்வால் போன்ற திறமையான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போகிறது" என்று ஒரு ரசிகர் தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். "போட்டிக்கு முன்பு இவ்வளவு பில்டப், ஆனால் ஆட்டத்தில் ஒன்றுமில்லை" என்று பலரும் தங்களது ஏமாற்றத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த இரு ஜாம்பவான்களின் இந்த சொதப்பலான ஆட்டம், அவர்களின் ஒருநாள் எதிர்காலம் குறித்த விவாதங்களை மீண்டும் தீவிரமாக்கியுள்ளது. 2027 உலகக் கோப்பையில் விளையாட வேண்டும் என்ற அவர்களது கனவிற்கு, இந்தத் தொடர் ஒரு அக்னிப் பரீட்சையாக அமைந்துள்ளது. ஒருபுறம், "இது ஒரு மோசமான போட்டிதான்; கோலி மீண்டு வருவார்" என்று சில ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தாலும், மறுபுறம், "இவர்கள் ஓய்வு பெறுவதற்கான நேரம் வந்துவிட்டது" என்ற குரல்களும் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
எட்டு மாத கால காத்திருப்பு, ஒரு சில நிமிடங்களில் ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. இந்த விமர்சனங்களுக்கும், கேலிகளுக்கும் கோலியும், ரோஹித்தும் அடுத்த போட்டியில் தங்களது பேட்டால் பதிலடி கொடுப்பார்களா, அல்லது இதுவே அவர்களது முடிவாக இருக்குமா?