அடிலெய்ட்: இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை வியாழக்கிழமை அடிலெய்ட் நகரில் தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அடிலெய்ட் நகரிலும் மழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக இந்திய அணியில் பயிற்சி பாதிக்கப்பட்டது. எனினும் மழை பெய்கிறது என ஓய்வில் இல்லாத விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளரங்கில் நின்று பயிற்சியில் ஈடுபட்டனர்.முதல் ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா 8 ரன்களிலும் விராட் கோலி டக் அவுட் ஆகியும் ஆட்டம் இழந்தார்.

இதனால் தங்களுடைய திறமையை நிரூபித்து இந்திய அணியில் தொடர வேண்டும் என்பதற்காக இருவரும் தீவிர வலை பயிற்சி ஈடுபட்டனர். குறிப்பாக அடிலெய்ட் மைதானம் விராட் கோலிக்கு மிகவும் சாதகமான மைதானம் ஆகும். இதுவரை இங்கு நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 254 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் இரண்டு சதம் அடங்கும். அவருடைய சராசரி ஒரு நாள் கிரிக்கெட்டில் அடிலெய்ட் மைதானத்தில் 61 என்ற அளவில் இருக்கின்றது. இதைப் போன்று டெஸ்ட் போட்டிகளில் 537 ரன்கள் அடித்துள்ள விராட் கோலி அடிலெய்ட் மைதானத்தில் 3 சதம் அடித்துள்ளார்.
இதனால் விராட் கோலி அடிலெய்ட் மைதானத்தில் நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று ரோகித் சர்மா ஹேசல்வுட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்த நிலையில், அவர் எங்கு எப்படி பந்து வீசுவாறோ, அதேபோல் வலைப்பயிற்சியில் பௌலர்களை பந்து வீச சொல்லி அதை பிரத்தேகமாக ரோகித் சர்மா எதிர்கொண்டார்.
இதன் மூலம் ஹேசல்வுட்டை எப்படி சமாளிப்பது என்பது குறித்து அவர் தீவிர பயிற்சி எடுத்தார். இதனை அடுத்து மழை நின்றவுடன் மீண்டும் மைதானத்தில் இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்திய அணியின் துணை கேப்டனான ஸ்ரேயாஸ் இடம் கௌதம் கம்பீர் சிறிது நேரம் பேசினார். இதேபோன்று வலைப்பயிற்சியில் குல்தீப் யாதவ் அதிக நேரம் பந்து வீசினார்.இதனால் இரண்டாவது ஒருநாள் போட்டியில் அவர் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.