மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.இந்த தொடர் வரும் அக்டோபர் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தொடரில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இதில் ரோகித் சர்மாவின் கேப்டன்சி பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இருவரும் கடைசியாக இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தான் விளையாடினார்கள். அதன் பிறகு ஐபிஎல் தொடருக்கு பின் இதுவரை எந்த ஒரு கிரிக்கெட் போட்டிகளிலும் விராட் கோலி, ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை.

இப்படி ஒரு கட்டத்தில் இருவரும் எப்படி இந்திய ஒரு நாள் அணியும் தேர்வு செய்யப்பட்டார்கள் என திலீப் வெங்சர்கார் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய அவர், "ரோகித் சர்மாவும் விராட் கோலியும் பல ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார்கள். இருவரும் ஒரு நாள் கிரிக்கெட்டில் மிகப்பெரிய ஜாம்பவான்கள்."
"ஆனால் தேர்வு குழுவினர் இருவரின் விஷயத்தில் முக்கிய முடிவை எடுக்க வேண்டும். நீங்கள் எப்படி இரண்டு வீரர்களின் உடல் தகுதியை எந்தவித கிரிக்கெட் போட்டிகளிலும் அவர்கள் விளையாடாத போது தீர்மானித்தீர்கள். இருவரும் கடந்த காலங்களில் சிறப்பாக விளையாடியதால் அவர்களுடைய ரெக்கார்டை வைத்து தான் நீங்கள் ஆஸ்திரேலிய தொடருக்கு இருவரையும் தேர்வு செய்திருப்பீர்கள்."
"இந்திய கிரிக்கெட்டுக்காக இருவரும் ஆற்றிய பணி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆனால் டெஸ்ட், டி20 என இரண்டு பிரிவிலும் அவர்கள் விளையாடவில்லை. வெறும் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும்தான் விளையாடுகிறார்கள். அப்படி இருக்கும்போது அவருடைய பார்ம் மற்றும் உடல் தகுதி குறித்து கேள்வி நிச்சயம் வேண்டும். எனவே இருவரும் விஷயத்தில் கண்டிப்பாக தேர்வு குழு முடிவு எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது."
"இருவருக்கும் வாய்ப்பு தரப்பட வேண்டுமா இல்லை இளம் வீரருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டுமா என்பதை அஜித் அகார்கர் தான் முடிவு செய்ய வேண்டும். இதை பொறுத்துதான் இந்திய கிரிக்கெட் எவ்வாறு முன்னோக்கி செல்கிறது என்பதை அறிய முடியும்" என வெங்சர்கார் கூறியுள்ளார்.
தேர்வு குழுத் தலைவராக இருந்தபோதுதான் விராட் கோலிக்கு அவர் முதல்முறையாக இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்தார். பல எதிர்ப்புகளையும் மீறி தான் வாய்ப்பு கொடுத்ததாக அவர் பலமுறை கூறியிருக்கிறார். ஆனால் தற்போது அதே திலிப் வெங்சர்கார் விராட் கோலியை ஏன் அணியில் எடுத்தீர்கள் என்று கேள்வி கேட்கும் நிலை உருவாகி இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.