பெர்த்: பெர்த் ஆப்டஸ் மைதானத்தில் நடந்த இந்திய அணியின் பயிற்சி முகாமில் இளம் கேப்டன் சுப்மன் கில் செய்த தவறுகளை விராட் கோலி திருத்த, முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அவருக்கு நீண்ட 'லெக்சர்' எடுத்த காட்சிகள், ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா அணி விளையாட உள்ளது. அதற்கு முன்பாக நடந்த வலைப்பயிற்சியின்போது, அனைவரின் கவனமும் புதிய கேப்டன் சுப்மன் கில் மீதே இருந்தது. பலவிதமான பந்துவீச்சுகளை எதிர்கொண்ட அவர், தனது சில ஷாட்கள் குறித்துத் திருப்தியடையாமல், மீண்டும் மீண்டும் விராட் கோலியை நோக்கித் திரும்பினார்.
கோலியும், ஒரு மூத்த வீரராக, சுப்மன் கில்லின் பேட்டிங்கில் இருந்த நுணுக்கமான தவறுகளைக் கண்டறிந்து, அதைச் சரி செய்தார். குறிப்பாக, கில்லின் கால் நகர்வுகள் (footwork), ஷாட் தேர்வு, பேக்லிஃப்ட் டைமிங் போன்றவற்றில் கோலி திருத்தங்களைச் சொன்னார். ஒவ்வொரு பந்துக்கும் இடையில், கோலி தனது கைகளால் சைகை காட்டி, எப்படி ஆட வேண்டும் என்று விளக்கினார். அதை சுப்மன் கில் ஒரு மாணவனைப் போலக் கூர்ந்து கவனித்தார். இந்திய கிரிக்கெட்டின் தலைமைப் பொறுப்பு எவ்வளவு சீராகக் கைமாறுகிறது என்பதை இந்த நிகழ்வுகள் காட்டியது.

தனது பேட்டிங் பயிற்சியை முடித்தவுடன், சுப்மன் கில் நேராகச் சென்றது, தனது முன்னாள் கேப்டனும், உலகக் கோப்பையை வென்ற நாயகனுமான ரோஹித் சர்மாவிடம்தான். மைதானத்தின் ஓரத்தில் நின்றுகொண்டு, இருவரும் நீண்ட நேரம் உரையாடினர்.
மைதானத்தின் மையப்பகுதியை நோக்கி சைகை காட்டி, ஃபீல்ட் ப்ளேஸ்மென்ட் குறித்தும், எந்தச் சூழ்நிலையில் எந்தெந்த ஷாட்களை ஆட வேண்டும் என்பது குறித்தும் ரோஹித், கில்லுக்கு ஒரு நீண்ட 'லெக்சர்' எடுத்தார். இது, ஒரு முன்னாள் கேப்டன், தனது அனுபவங்களையும், வியூகங்களையும் எந்தவித ஈகோவும் இன்றி, புதிய கேப்டனுக்குக் கற்றுக்கொடுக்கும் ஒரு நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
இந்தத் தீவிரமான ஆலோசனைகளுக்குப் பிறகு, கோலி, ரோஹித் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் பயிற்சியாளர் கௌதம் கம்பீருடன் சிறிது நேரம் பேசிவிட்டு, பின்னர் ஒன்றாக அமர்ந்து கலகலப்பாகச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அவர்களுடன் இணைந்துகொள்ள, அந்த இடம் சிரிப்பலையால் அதிர்ந்தது. இது, தலைமை மாற்றம் குறித்த சர்ச்சையான விவாதங்களுக்கு மத்தியில், அணிக்குள் இருக்கும் நட்புறவையும், ஆரோக்கியமான சூழலையும் உணர்த்துவதாக இருந்தது.
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய ரோஹித் சர்மா, இந்தப் பயிற்சி முகாமில் மிகவும் அமைதியாகக் காணப்பட்டார். தனது உடற்தகுதிப் பயிற்சிகள், கேட்ச்சிங் பயிற்சி போன்றவற்றில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தினார். அணியின் மையப்புள்ளியாக இல்லாமல், கில்லின் அணியில் ஒரு மூத்த வீரராக தனது புதிய பாத்திரத்தை அவர் உணர்ந்து செயல்படுவது தெளிவாகத் தெரிந்தது.