IND vs AUS: சச்சின் - கங்குலிக்கு அடுத்து நாங்கதான்.. ரோஹித் - கோலி செய்த பிரம்மாண்ட ரெக்கார்டு
சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இணைந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 168 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி கூட்டணியானது பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த கூட்டணிகள் வரிசையில் ரோஹித் சர்மா - விராட் கோலி கூட்டணி தற்போது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து 5375 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளனர்.

சாதனையாளர்களின் கூட்டணி
முன்னதாக, ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் சவுரவ் கங்குலி கூட்டணி ஒருநாள் போட்டிகளில் 8,227 ரன்களை சேர்த்து இருந்தது. அதுவே இந்தப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. மூன்றாவது இடத்தில் ரோஹித் சர்மா மற்றும் ஷிகர் தவான் உள்ளனர். அவர்கள் இருவரும் 5193 ரன்கள் எடுத்துள்ளனர். இதன்மூலம், ரோஹித் - கோலி கூட்டணி தவான் - ரோஹித் கூட்டணியை முறியடித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இது மட்டுமின்றி சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிகமுறை 150 ரன்களுக்கும் அதிகமான கூட்டணி ரன்களை சேர்த்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் - சவுரவ் கங்குலி ஆகியோருடன் முதல் இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது ரோஹித் சர்மா - விராட் கோலி ஜோடி. இந்த இரண்டு ஜாம்பவான் ஜோடிகளும் 12 முறை ஒருநாள் போட்டிகளில் 150 க்கும் அதிகமான கூட்டணி ரன்களை சேர்த்துள்ளன. இந்த பட்டியலில் இலங்கையின் திலகரத்னே தில்ஷன் - குமார் சங்ககாரா ஜோடி 7 முறை 150 ரன்களுக்கும் மேல் கூட்டணி அமைத்து மூன்றாவது இடத்தில் உள்ளது.
வெற்றிக்கு வித்திட்ட அபார ஆட்டம்
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக மேட் ரென்ஷா 56 ரன்கள் சேர்த்திருந்தார்.
அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தபோது, தொடக்க வீரர் சுப்மன் கில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இணைந்து அணியை வழிநடத்திச் சென்றனர். அவர்கள் இருவரும் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 168 ரன்கள் சேர்த்தனர். ரோஹித் சர்மா 121 ரன்கள் எடுத்தும் மற்றும் விராட் கோலி 74 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால், இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெறவும் இவர்கள் முக்கிய காரணமாக இருந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1 என்ற கணக்கில் முடித்து, வரலாற்று 'ஒயிட்வாஷ்' தோல்வியை தவிர்த்த இந்திய அணிக்கு, கோலி - ரோஹித் கூட்டணி அமைத்த இந்தச் சாதனை பார்ட்னர்ஷிப் ஆறுதல் அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications