Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs AUS: “ஆஸ்திரேலியா தொடரில் 3 செஞ்சுரி அடித்தாலும் கோலி, ரோஹித்துக்கு..” அஜித் அகர்கர் வேட்டு

டெல்லி: "விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா, 2027 உலகக் கோப்பையில் விளையாடுவது குறித்து எந்த உறுதியையும் நாங்கள் அளிக்கவில்லை" என்று சில நாட்களுக்கு முன்பு இந்திய தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த நிலையில், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அகர்கர் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளார். "ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும், அந்த இரு ஜாம்பவான்களையும் நாங்கள் சோதனைக்கு உள்ளாக்க மாட்டோம்; அவர்கள் அந்த மரியாதையை சம்பாதித்துள்ளனர்" என்று அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.

அதே சமயம், "ஆஸ்திரேலிய தொடரில் மூன்று சதங்கள் அடித்தாலும் அவர்கள் 2027 உலகக்கோப்பை தொடரில் ஆடுவார்கள் என எங்களால் உறுதி அளிக்க முடியாது" எனவும் கூறி இருக்கிறார். மத்தளத்தின் இந்தப் பக்கம் ஒரு அடி, அந்தப் பக்கம் ஒரு அடி என்பது போல ரோஹித், கோலிக்கு என்ன நடந்தாலும் அதை நாங்கள் தான் முடிவு செய்வோம் என சுற்றி வளைத்து சொல்லி இருக்கிறார் அஜித் அகர்கர்.

Ajit Agarkar Virat Kohli Rohit Sharma Team India ODI Cricket

"அவர்களுக்கு எதுவும் நிரூபிக்கத் தேவையில்லை!"

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, 'என்டிடிவி" நிகழ்ச்சியில் பேசிய அஜித் அகர்கர், கோலி மற்றும் ரோஹித்தின் எதிர்காலம் குறித்த கேள்விகளுக்கு விரிவாகப் பதிலளித்தார்.

"அவர்கள் இருவரும் மிக நீண்ட காலமாக இந்திய கிரிக்கெட்டின் அசைக்க முடியாத வீரர்களாக இருந்துள்ளனர். ஒருவர் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார், மற்றொருவர் 50-க்கு அருகில் சராசரி வைத்துள்ளார். அப்படிப்பட்ட வீரர்களை, ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் நீங்கள் சோதனைக்கு உள்ளாக்கப் போவதில்லை. அது முட்டாள்தனமாக இருக்கும், இல்லையா?" என்று அகர்கர் கேள்வியெழுப்பினார். இதன் மூலம், அவர்களின் கடந்த காலச் சாதனைகளுக்குத் தேர்வுக்குழு உரிய மரியாதை கொடுக்கும் என்பதைத் தெளிவுபடுத்தினார்.

"இரண்டு ஆண்டுகள் என்பது நீண்ட காலம்!"

2027 உலகக் கோப்பை குறித்துப் பேசிய அவர், தனது முந்தைய கருத்தை மீண்டும் தெளிவுபடுத்தினார். "இரண்டு ஆண்டுகளில், நிலைமை எப்படி இருக்கும் என்று நமக்குத் தெரியாது. இது அவர்களுக்கு மட்டுமல்ல; சில இளம் வீரர்கள் கூட அந்த நேரத்தில் அணியில் இல்லாமல் போகலாம். எதிர்காலத்தை யாராலும் கணிக்க முடியாது," என்று அவர் கூறினார். இது, அனைவருக்குமான பொதுவான யதார்த்தம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஆஸ்திரேலியத் தொடர் இறுதித் தேர்வு அல்ல!

இந்த ஆஸ்திரேலியத் தொடரின் செயல்திறன், கோலி மற்றும் ரோஹித்தின் உலகக் கோப்பை எதிர்காலத்தைத் தீர்மானிக்குமா என்ற கேள்விக்கு, அகர்கர் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். "2027 என்பது வெகு தொலைவில் உள்ளது. அவர்கள் இருவரும் இப்போது ஒரு வடிவத்தில் மட்டுமே விளையாடுகிறார்கள். மார்ச் 9-க்குப் பிறகு, அவர்கள் இப்போதுதான் சர்வதேச கிரிக்கெட் விளையாட வருகிறார்கள். அவர்கள் விளையாடத் தொடங்கிய பிறகு, நிலைமையை மதிப்பிடலாம்," என்றார்.

மேலும் அவர், "இந்தத் தொடரில் அவர்கள் இருவரும் ரன் குவிக்கவில்லை என்பதால், அவர்கள் உலகக் கோப்பையில் இருக்க மாட்டார்கள் என்றோ, அல்லது அவர்கள் மூன்று சதங்கள் அடித்தால், அவர்கள் நிச்சயம் விளையாடுவார்கள் என்றோ அர்த்தமில்லை. அவர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையில் சாதிக்க வேண்டிய அனைத்தையும் சாதித்துவிட்டார்கள்" என்று அகர்கர் குறிப்பிட்டார்.

அணியின் எதிர்காலத் திட்டம் என்ன?

தேர்வுக்குழுவின் நீண்டகாலத் திட்டம் குறித்துப் பேசிய அகர்கர், "அணி எப்படி உருவாகிறது என்பதை நாங்கள் பார்ப்போம். எங்களிடம் சில திட்டங்கள் உள்ளன. காலம் செல்லச் செல்ல, அணி எங்கே முன்னேறுகிறது என்பது குறித்து எங்களுக்கு ஒரு சிறந்த யோசனை கிடைக்கும்" என்று கூறினார்.

அஜித் அகர்கரின் இந்தப் பேட்டி, கோலி மற்றும் ரோஹித்தின் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் திணிக்க தேர்வுக்குழு விரும்பவில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. அவர்கள் இந்தத் தொடரில் எந்தவித அழுத்தமும் இன்றி, தங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம், அவர்களின் எதிர்காலம் என்ன என்பதை அகர்கர் உறுதியாக சொல்லவில்லை.

Story first published: Friday, October 17, 2025, 18:16 [IST]
Other articles published on Oct 17, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+