IND vs AUS: சிங்கப்பெண்.. உலக சாதனைகளை உடைத்த ஸ்மிருதி மந்தனா.. எந்த வீராங்கனையும் தொடாத ரெக்கார்டு
விசாகப்பட்டினம்: இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 'ஸ்டைலிஷ்' பேட்ஸ்மேனும், உலகின் நம்பர் 1 ஒருநாள் வீராங்கனையுமான ஸ்மிருதி மந்தனா, உலகக் கிரிக்கெட்டில் ஒரு புதிய சரித்திரத்தைப் படைத்துள்ளார். மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு காலண்டர் ஆண்டில் 1000 ரன்களைக் கடந்த முதல் வீராங்கனை என்ற மாபெரும் மைல்கல் சாதனையை அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 12) நிகழ்த்தியுள்ளார். மேலும், மகளிர் ஒருநாள் போட்டி வரலாற்றில் மற்றொரு மைல்கல் சாதனையையும் நிகழ்த்தி இருக்கிறார்.
விசாகப்பட்டினத்தில் 2025 மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா ஆடியது. இந்த ஒருநாள் போட்டியில்தான் ஸ்மிருதி மந்தனா இந்த வரலாற்று மைல்கல்லை எட்டினார். 2025-ஆம் ஆண்டில் தனது 18-வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவருக்கு, 1000 ரன்களை எட்ட 18 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.
சிக்ஸருடன் சரித்திரம் படைத்த தருணம்!
ஆட்டத்தின் 8-வது ஓவரை ஆஸ்திரேலியச் சுழற்பந்து வீச்சாளர் சோஃபி மோலினக்ஸ் வீச, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை, தனது வழக்கமான நேர்த்தியான ஷாட்டால் சிக்ஸருக்குப் பறக்கவிட்டதன் மூலம், மந்தனா இந்த வரலாற்றுச் சாதனையை ஸ்டைலாக எட்டினார். மேலும் இந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தார். அதிரடியாக ஆடிய மந்தனா 66 பந்துகளில் 80 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

28 ஆண்டு கால சாதனையை முறியடித்தார்!
இந்த மைல்கல்லை எட்டியதன் மூலம், ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் பெலிண்டா கிளார்க் 1997-ஆம் ஆண்டு படைத்த 970 ரன்கள் என்ற 28 ஆண்டு கால சாதனையை மந்தனா முறியடித்தார். ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனைகள் பட்டியலில், மந்தனா தற்போது முதலிடத்தில் உள்ளார்.
ஒரு காலண்டர் ஆண்டில் அதிக ஒருநாள் ரன்கள் (மகளிர் கிரிக்கெட்):
- ஸ்மிருதி மந்தனா (இந்தியா): 18* போட்டிகளில் 1003* ரன்கள் (2025).
- பெலிண்டா கிளார்க் (ஆஸ்திரேலியா): 16 போட்டிகளில் 970 ரன்கள் (1997).
- லாரா வோல்வார்ட் (தென்னாப்பிரிக்கா): 18 போட்டிகளில் 882 ரன்கள் (2022).
- டெபி ஹாக்லி (நியூசிலாந்து): 16 போட்டிகளில் 880 ரன்கள் (1997).
IND vs WI: கே எல் ராகுல் செய்த செயல்.. மைதானத்தை விட்டு வெளியேறிய வீரர்கள்.. குழம்பிய அம்பயர்
மற்றொரு பிரம்மாண்ட மைல்கல்
மேலும், இந்தப் போட்டியில் அவர் 58 ரன்களைக் கடந்த போது, மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ரன்களைக் கடந்த ஐந்தாவது வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். அதிலும், 5000 ரன்களை குறைந்த போட்டிகளில் எட்டிய வீராங்கனை என்ற உலக சாதனை படைத்தார்.
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதற்கு முன் நான்கு வீராங்கனைகள் மட்டுமே 5000 ரன்களைக் கடந்து இருந்தனர். இந்தப் பட்டியலில், அதிக ரன்களை கடந்து, இந்திய ஜாம்பவான் மிதாலி ராஜ் 7805 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications