IND vs AUS: ஹாக்கி ஆட வேண்டியவர் இந்திய கிரிக்கெட் அணியில் எப்படி? யார் இந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ்?
மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், இந்திய அணி இமாலய இலக்கை நோக்கி ஆடிய போது, தனது முதல் உலகக் கோப்பை சதத்தால் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று இருக்கிறார் ஜெமிமா ரோட்ரிக்ஸ். வீழ்த்தவே முடியாது என சொல்லப்பட்ட ஆஸ்திரேலிய மகளிர் அணியை வீழ்த்திய இந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் யார்? ஹாக்கி வீராங்கனை எப்படி இந்திய கிரிக்கெட் அணியில் ஆடுகிறார்?
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ், தனது வசீகரமான புன்னகைக்கும், நேர்த்தியான பேட்டிங் திறமைக்கும் பெயர் பெற்றவர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் மிடில்-ஆர்டரின் தூணாக விளங்கும் இவர், தனது 17-வது வயதிலேயே, பிப்ரவரி 2018-ல் இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார்.

நவி மும்பையில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், 339 என்ற இமாலய இலக்கை விரட்டிய இந்தியா, 59 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய ஜெமிமா, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுருடன் இணைந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். 115 பந்துகளில் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தையும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் சதத்தையும் பதிவு செய்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் 134 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 127 ரன்கள் குவித்து, இந்தியாவின் வரலாற்று வெற்றிக்கு வித்திட்டார்.
ஹாக்கி வீராங்கனை
ஜெமிமா ஒரு கிரிக்கெட் வீராங்கனை மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த ஹாக்கி வீராங்கனையும் கூட. கிரிக்கெட்டை முழுநேரமாக தேர்ந்தெடுக்கும் முன், மகாராஷ்டிரா மாநிலத்திற்காக 17 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி அணியில் விளையாடியுள்ளார். மேலும், பள்ளிக் காலத்தில் கூடைப்பந்து மற்றும் கால்பந்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கியுள்ளார். இந்த பன்முக விளையாட்டுத் திறனே, களத்தில் அவரது சுறுசுறுப்புக்கும், மன உறுதிக்கும் காரணமாக அமைந்துள்ளது.
உள்ளூர் கிரிக்கெட்டில் ஜொலித்த தருணங்கள்:
உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக விளையாடி வரும் ஜெமிமா, தனது திறமையை இளம் வயதிலேயே நிரூபித்தார். 2017-ஆம் ஆண்டில், 19 வயதுக்குட்பட்டோருக்கான உள்ளூர் ஒருநாள் போட்டியில், சௌராஷ்டிரா அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 202 ரன்கள் குவித்து, ஸ்மிருதி மந்தனாவுக்குப் பிறகு இந்தச் சாதனையை நிகழ்த்திய இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
2017-18 சீசனுக்கான சிறந்த இளம் வீராங்கனைக்கான (ஜூனியர் டொமஸ்டிக்) விருதை பிசிசிஐ-யிடம் இருந்து பெற்றார். மேலும், 2018-ல் சிறந்த உள்ளூர் ஜூனியர் வீராங்கனைக்கான 'ஜக்மோகன் டால்மியா' விருதையும் வென்றார். மகளிர் ஐபிஎல் தொடரின் முதல் ஏலத்தில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி இவரை ரூ. 2.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் 2022 ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஜெமிமா ஒரு முக்கிய அங்கமாக இருந்துள்ளார். நெருக்கடியான தருணங்களில் நிதானமாகவும், அதே சமயம் அதிரடியாகவும் விளையாடும் இவரது திறன், இந்திய மகளிர் கிரிக்கெட்டின் எதிர்காலத்திற்கு ஒரு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications