IND vs AUS: இத்தனை கேட்ச் மிஸ்ஸா.. கேப்டன் தான் டாப்.. மோசமாகும் இந்தியா ஃபீல்டிங்.. புதிய தலைவலி
அகமதாபாத்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஃபீல்டர்கள் மொத்தமாக 12 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு இந்திய அணியின் பேட்டிங், பவுலிங் தான் காரணமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால் நடப்பு உலகக்கோப்பை தொடரில் மட்டும் விராட் கோலி 700க்கும் அதிக ரன்களும், ரோகித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தலா 500க்கும் அதிகமான ரன்களும் விளாசியுள்ளனர்.

இன்னொரு பக்கம் இந்திய அணியின் பவுலர்கள் மிரட்டலாக செயல்பட்டு வருகின்றனர். இந்திய அணியின் பும்ரா, முகமது ஷமி, ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோர் 15 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தி அசத்தியுள்ளனர். ஆனால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெல்வதற்கு பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டால் மட்டும் போதாது.
ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான அரையிறுதியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றதற்கு அந்த அணி வீரர்களின் ஃபீல்டிங்கே மிகமுக்கியமான காரணம். ஆனால் இந்திய அணியின் ஃபீல்டிங் உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக இருப்பது போல் தோன்றினாலும், டேட்டாக்கள் உண்மை வெளிப்படையாக கூறியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
இந்த உலகக்கோப்பை தொடரில் மட்டும் இந்திய அணி மொத்தமாக 12 கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கேப்டன் ரோகித் சர்மா 5 கேட்ச்களையும், முகமது சிராஜ் 2 கேட்ச்களையும் கோட்டைவிட்டுள்ளனர். அதேபோல் விராட் கோலி, ஜடேஜா, முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், பும்ரா ஆகியோரும் கேட்ச்களை கோட்டைவிட்டுள்ளனர்.
அரையிறுதி சுற்றில் முகமது ஷமி வில்லியம்சனுக்கு கொடுத்த கேட்சை கோட்டைவிட்ட போது, ரசிகர்கள் அவரை காட்டமாக விமர்சித்தனர். ஆனால் கேப்டன் ரோகித் சர்மாவோ 5 கேட்ச்களை கோட்டைவிட்டிருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் தரமாக அமையவில்லை என்றால், உலகக்கோப்பையை கனவை மீண்டும் ஒருமுறை இந்திய அணி பறிகொடுக்கும் அபாயம் உள்ளது.


Click it and Unblock the Notifications