கான்பூர் : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதற்கு காரணம் இந்த தொடர் தொடங்குவதற்கு முன்பு வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடுகிறது.
இதில் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே வங்கதேச அணி பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளில் வென்று தொடரையும் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது. இதில் வங்கதேச வீரர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள்.

இதனால் இந்தியாவுக்கு இம்முறை கடும் நெருக்கடி காத்திருக்கிறது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்திருந்தார்கள். வங்கதேசத்தை சாதாரணமாக நினைக்காமல் இந்திய வீரர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே சென்னையில் முகாமிட்டு பயிற்சி செய்து வந்தனர். இந்த சூழலில் எதிர்பார்த்த அளவுக்கு வங்கதேச அணி சிறப்பாக விளையாடவில்லை.
இதனால் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்திய அணி முழுமையாக தொடரை கைப்பற்றியது. இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன், இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நாங்கள் தோல்வி அடைந்த காரணம் எங்களுடைய பேட்டிங்தான். எங்களுடைய பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடவில்லை. இது போன்ற ஆடுகளங்களில் அதிக ரன்கள் குவிக்க வேண்டியது அவசியம்.
ஆனால் எங்களுடைய பேட்ஸ்மேன்களை நீங்கள் பார்த்தால் 30, 40 பந்துகளை எதிர் கொண்டு அதற்கு மேல் களத்தில் நிற்காமல் ஆட்டம் இழந்து விடுகிறார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பேட்ஸ்மேன் களத்திற்கு வந்தால் பெரிய ஸ்கோரை நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும். பந்துவீச்சு தரப்பில் நாங்கள் முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை எடுக்க தவறவிட்டோம்.
இந்திய அணியின் சில பார்ட்னர்ஷிப் ஆட்டத்தின் முடிவையே மாற்றிவிட்டது. இப்படியான சூழலில் விக்கெட்டுகள் எடுப்பது எப்படி என்று நாம் பார்க்க வேண்டும். கான்பூர் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸ் நன்றாக பேட்டிங் செய்தார். அதை அவர் அடுத்த டெஸ்ட் போட்டிகளை தொடர்வார் என்று நம்புகிறேன். இதே போன்று மெஹந்தி ஹாசன் இந்த டெஸ்டில் நன்றாக செயல்பட்டார் என்று வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.