கான்பூர் : வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் தருவாயில் இருக்கின்றது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதல் நாளில் வெறும் 35 ஓவர்கள் தான் வீசப்பட்டது. இதை அடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் மழையால் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி சமனில் முடிவடையும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்களில் ஆட்டமிழந்தது. இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அபாரமாக விளையாடி டி20 கிரிக்கெட் போல் ரன் குவிப்பில் ஈடுபட்டு வந்தன. ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்களும், கேஎல் ராகுல் 43 பந்துகளில் 68 ரன்களும், விராட் கோலி 35 பந்துகளில் 47 ரன்களும் குவித்தனர். இதனால் இந்திய அணி 34.4 ஓவர்களில் எல்லாம் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்தது.
இதை அடுத்து வங்கதேச அணி 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களுடைய இரண்டாவது இன்னிங்சை நேற்று தொடங்கியது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேச அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 26 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து ஐந்தாவது நாள் தொடக்கத்தில் வங்கதேசத்தை குறைந்த ஸ்கோரில் சுருட்ட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்தியா களமிறங்கியது.
மோமினுல் ஹக் இரண்டு ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து நட்சத்திர வீரர் ஜடேஜா அபாரமாக செயல்பட்டு கேப்டன் நஜ்முல் ஹுசைன், லிட்டன் டாஸ் மற்றும் சாகிபுல் ஹசன் ஆகியோர் விக்கெட்டுகளை சீரான இடைவேளையில் வீழ்த்தி அசத்தினார். இதன் மூலம் வங்கதேச அணி தடுமாறி வருகிறது.
முஸ்பிகுர் ரஹீம் கடைசி வரை நின்று 37 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இதன் மூலம் 47 ஓவர் முடிவில் வங்கதேச அணி 146 ரன்களில் சுருண்டது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அஸ்வின், ஜடேஜா, பும்ரா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இதனையடுத்து இந்திய அணி வெற்றி பெற 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதனையடுத்து, ரோகித், கில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, ஜெய்ஸ்வால் அபாராக அரைசதம் அடித்தார். கோலி அவருக்கு துணை நின்றார். இதனால் இந்திய அணி 17.2 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி 74.24 வெற்றி சதவீதத்துடன் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இன்னும் 3 டெஸ்டில் இந்தியா வென்றால் , பைனலுக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதி பெற்றுவிடும். அடுத்த டெஸ்ட் போட்டி நியூசிலாந்துக்கு எதிராக வரும் 16ஆம் தேதி தொடங்குகிறது.
இதே போன்று சொந்த மண்ணில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக 4 டெஸ்ட், வங்கதேசத்துக்கு எதிராக 2 டெஸ்ட் என்று மொத்தம் 6 டெஸ்ட்களில் இந்தியா வென்றுள்ளது.