டாக்கா : வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிராவாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தால் தற்போது போட்டி தலைகீழாக மாறி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.
ஆனால் கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் முதல் நாளில் வெறும் 35 ஓவர்கள் மட்டும்தான் வீசப்பட்டது. இதேபோன்று இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் முற்றிலுமாக கைவிடப்பட்ட நிலையில் நான்காவது நாள் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது.இதில் வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களில் ஆட்டமிழந்தது.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்தது. ரோகித் சர்மா, தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார்.
கில் 39 ரன்களும், ரோஹித் சர்மா 23 ரன்களும், விராட் கோலி 47 ரன்களும் குவித்தனர்.
நடுவரிசையில் கே எல் ராகுல் அபாரமாக விளையாடி 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தனர். இந்த சூழலில் இந்திய அணி 34.4 ஓவர்களில் எல்லாம் 285 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து 53 ரன்கள் பின்தங்கிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது.
இதில் தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 10 ரன்களிலும், நைட் வாட்ச்மேன் ஆக களமிறங்கிய ஹசன் மகமத் நான்கு ரன்களிலும், அஸ்வின் பந்துவீச்சில் பெவிலியின் திரும்பினர். இதனால் வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் வங்கதேச அணி இந்திய அணியின் ஸ்கோரை விட 26 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.
தற்போது இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மதியநேர உணவு இடைவேளையின் போதோ, இல்லை தேநீர் இடைவேளையின் போதோ, வங்கதேச அணியில் எஞ்சி இருக்கும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியாவை விட வங்கதேச அணி 50 ரன்கள் அல்லது 100 ரன்களோ அல்லது 150 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் எஞ்சி இருக்கும் ஓவர்களில் இந்திய அணி மீண்டும் அதிரடியாக விளையாடி வங்கதேச அணி நிர்ணயிக்கும் இலக்கை எட்ட வேண்டும்.
இதனால் வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 100 அல்லது 150 ரன்களுக்குள் இந்தியா சுருட்ட வேண்டும். அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா நான்காவது இன்னிங்ஸில் 100 ரன்கள் அடித்தால் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்படும். இதன் மூலம் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது.