துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேச அணி தோல்வியை தழுவியிருக்கிறது. இதன் மூலம் அரையிறுதி சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு வங்கதேசத்துக்கு கடினமாக இருக்கிறது. இந்த போட்டியில் வங்கதேச அணி 35 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஜேக்கர் அலி மற்றும் தவ்ஹீத் ஹிர்தாய் ஆகியோர் அபாரமாக பார்ட்னர்ஷிப் சேர்த்து வங்கதேச அணியை மீட்டனர்.
இதன் மூலம் 228 ரன்கள் என்ற கௌரவமான இலக்கை வங்கதேச அணி எட்டியது. எனினும் பந்துவீச்சில் வங்கதேச அணி சில கேட்ச் வாய்ப்புகள்,ரன் அவுட் வாய்ப்புகளை தவற விட்டதால் தோல்விக்கு அதுவே முக்கிய காரணமாக இருந்தது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் சாண்டோ, "நாங்கள் பேட்டிங் செய்யும்போது முதல் பவர் பிளேவில் அதிக விக்கெட்டுகளை இழந்துவிட்டோம். அதுதான் எங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஆரம்ப கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தால் அதிலிருந்து மீண்டு வருவது கடினம்".
"அங்கேயே நாங்கள் தோற்று விட்டோம். எனினும் ஹிர்தாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து எங்களை சரிவிலிருந்து மீட்டார்கள். நாங்கள் பந்து வீசும் போதும் சில தவறுகளை செய்தோம். சில கேட்ச்களை மிஸ் செய்தோம். ரன் அவுட் வாய்ப்பைத் தவற விட வேண்டும். இதை எல்லாம் நாங்கள் சரியாக செய்திருந்தால் ஒருவேளை போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக அமைந்திருக்கும்".
"இதுபோன்ற ஆடுகளத்தில் சுழற் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்படுவார்கள். அந்த பவுலிங்கிற்கு எதிராக ஹிர்தாய் மற்றும் ஜேக்கர் அலி ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து இருக்கிறார்கள். முகமதுல்லாவுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. அவர் இருந்திருந்தால் கூடுதலாக ஒரு சுழல் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி இருக்கலாம்".
" எங்களுடைய வேகப்பந்துவீச்சாளர்களும் மோசமாக செயல்படவில்லை. எனினும் அவர்கள் ஆரம்ப கட்டத்தில் சில விக்கெட்டுகள் எடுத்திருந்தால், இன்றைய ஆட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றிருப்போம்" என வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.