துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி தங்களுடைய முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியிருக்கிறது. 229 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி கொஞ்சம் தடுமாறி தான் தொட்டது. இதற்கு காரணம் ஆடுகளம் தோய்வாக இருந்ததால் பேட்ஸ்மேன்கள் கடுமையாக தடுமாறினர்.
எனினும் இந்திய அணியின் துணை கேப்டன் கில் அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இதைத் தொடர்ந்து போட்டிக்கு பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, தன்னம்பிக்கையுடன் இருந்தால் மட்டுமே இது போன்ற போட்டிகளில் வெற்றி பெற முடியும் என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், "இன்றைய ஆட்டத்தில் நாங்கள் பலவிதமான எமோஷன்களில் இருந்தோம். இது போன்ற சூழ்நிலையை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும். எங்கள் அணியில் பல அனுபவ சாலிகள் இருக்கிறார்கள். இன்றைய ஆட்டத்தில் கூட கே எல் ராகுல், கில் ஆகியோர் கடைசி கட்டத்தில் நிதானமாக விளையாடி எங்களை கரை சேர்த்திருக்கிறார்கள்".
"ஒரு போட்டி தான் நடந்திருக்கிறது. இதனால் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பதை கணிக்க முடியாது. ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு இல்லாததால், போட்டி செல்ல செல்ல தோய்வாகும் என்று எங்களுக்கு நன்றாக தெரியும். இதனால்தான் பவர் பிளேவில் அதிரடியாக விளையாட முயற்சி செய்தோம். சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும் பழக்கம் எங்கள் அணி வீரர்களிடம் இருக்கின்றது".
"சமியின் வருகை எங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கின்றது. உலகத்தரம் வாய்ந்த வீரராக அவர் விளங்குகிறார். ஒவ்வொரு முறையும் அவரிடம் நான் பந்தை கொடுக்கும் போது எங்களுக்கு விக்கெட்டுகளை எடுத்து தரும் பழக்கத்தை கொண்டு இருக்கின்றார். சமி போல் பௌலர்கள் எங்களுக்கு நிறைய தேவை.கில், கடந்த சில காலமாக சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இதனால் அவருடைய ஆட்டம் குறித்து எனக்கு எதுவும் ஆச்சரியம் இல்லை".
"நான் ஒரு கேட்சை மிஸ் செய்ததால் அக்சர் பட்டேலுக்கு ஹாட்ரிக் சாதனை போனது. இதனால் அவரை நாளை டின்னருக்கு அழைத்து சென்று மன்னிப்பு கேட்க போகிறேன். அந்த கேட்சை நான் கண்டிப்பாக பிடித்து இருக்க வேண்டும். இதேபோன்று வங்கதேச வீரர்களும் சிறப்பாக பார்ட்னர்ஷிப் அமைத்து நன்றாக விளையாடினார்கள்.அவர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள். ஆடுகளத்தை நான் அமைக்கவில்லை. இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் எப்படி ஆடுகளம் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. பொறுத்திருந்து பார்ப்போம்" என்று ரோகித் சர்மா கூறியுள்ளார்.