மும்பை : சர்வதேச கிரிக்கெட் தற்போது பல மாற்றங்களை எதிர்நோக்கி இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு நாளில் 300 ரன்கள் அடிப்பதெல்லாம் பெரும் சாதனையாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 400 ரன்களையே அசால்டாக அடித்து வருகிறார்கள்.
இதேபோன்று ஒரு நாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் மேல் அடித்தால் 90ஸ் கிட்ஸ் அதை அதிசயமாக பார்ப்பார்கள் தற்போது 350 ரன்கள் எடுத்தாலும், அதனை இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி சேசிங் செய்து விடுகிறது.

டி20 கிரிக்கெட் பற்றி சொல்ல தேவையே இல்லை. இதனால் கிரிக்கெட்டின் பரிணாமம் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பெல்லாம் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு சுழற் பந்துவீச்சாளர் என்ற பிளேயிங் லெவனில் தான் ஒவ்வொரு அணியும் களமிறங்கும். இல்லையென்றால் ஒரு வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அணியில் கூடுதலாக இருப்பார்.
ஆனால் தற்போது ஒவ்வொரு அணியும் 350 ரன்களுக்கு மேல் எளிதாக அடிப்பதால் தற்போது வெள்ளை நிற கிரிக்கெட்டில் ஒவ்வொரு அணியும் சூழலுக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு வருகிறது. அண்மையில் இங்கிலாந்து ஆஸ்திரேலியா மோதிய ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி கிட்டத்தட்ட எட்டு பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது.
இதேபோன்று இங்கிலாந்து அணியும் 6 மற்றும் 7 பந்துவீச்சாளர்களை பயன்படுத்துகிறது. இதன் மூலம் பவுலிங் தெரிந்த பேட்ஸ்மேன்களையே ஒவ்வொரு அணியும், பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என நினைக்கிறது. இந்தியாவில் ஒரு காலத்தில் ஷேவாக், சச்சின், கங்குலி போன்ற பௌலிங் தெரிந்த பேட்ஸ்மேன்கள் அணியில் இருந்தார்கள்.
ஆனால் இது விராட் கோலி, ரோஹித் சர்மா காலத்தில் முற்றிலமாக மாறியது. தற்போது கௌதம் கம்பீர் பயிற்சியாளராக பதவி ஏற்றுள்ள நிலையில் மீண்டும் பௌலிங் தெரிந்த பேட்ஸ்மேன்களே பிளேயிங் லெவனில் சேர்த்திருக்கிறார். அந்த வகையில் நேற்று நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. இதில் ஹைலைட்டான விஷயம் என்னவென்றால், சஞ்சு சாம்சனை தவிர மற்ற 10 வீரர்களுக்குமே பவுலிங் வீச தெரியும்.
அபிஷேக் ஷர்மா, சூரியகுமார் யாதவ், நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்திக் பாண்டியா, ரியாண்,பராக், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்,வருண் சக்கரவர்த்தி,அஸ்வின் மாயங் யாதவ் என 10 பேருமே பந்துவீசி விக்கெட்டுகளை எடுக்கக் கூடியவர்கள். இதில் ஆறு வீரர்களுக்கு சுழற் பந்து வீசத் தெரியும். நான்கு வீரர்களுக்கு வேகப்பந்து வீச தெரியும்.இதுபோல் பவுலிங் பல வீரர்கள் இருந்தால் எதிரணி ரன்கள் அடிக்கும் போது பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்தி ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியும்.
உதாரணத்திற்கு ஏதேனும் ஒரு ஓவர் ஒரு ஆட்டத்தில் அதிக ரன்களை கொடுத்தால் அந்த வீரரின் ஓவர்களை அப்படியே நிறுத்திவிட்டு, அதற்கு பதில் வேறு ஒரு பவுலரை பந்து வீச அழைக்க முடியும். இப்படி ஒரு முடிவை கம்பீர் எடுத்ததை அடுத்து, தற்போது இந்திய பவுலிங் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. இதனால் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என நினைத்தால் ஒவ்வொரு பேட்ஸ்மேனும் பந்து வீசும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.