சென்னை: இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா வங்கதேச டெஸ்ட் தொடருக்கு முன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த இப்போதே திட்டமிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதைத் தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் விளையாட உள்ளது.
அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. கடந்த நான்கு முறையும் இந்திய அணியே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்று இருக்கிறது. அந்த வெற்றிப் பாதையை தொடர வேண்டும் என்பதில் இந்திய அணி கவனமாக உள்ளது.

பொதுவாக இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான பிட்ச் தான் அமைக்கப்படும். அதன் மூலம், இந்திய அணி எதிரணிகளை மிக எளிதாக வீழ்த்தி வெற்றி பெறும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதால் இந்தியாவிலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற முடிவை எடுத்த பிசிசிஐ அதை செயல்படுத்தியும் வருகிறது.
தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரிலும் அதை செயல்படுத்த வேண்டும் என கவுதம் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா, பிசிசிஐ உடன் ஆலோசித்து இருப்பதாக கூறப்படுகிறது. வங்கதேச அணியின் சுழற் பந்துவீச்சாளர்கள் இந்திய ஆடுகளங்களில் சிறப்பாக பந்து வீசுவார்கள் என்பதால் அதை சமாளிக்க வலைப் பயிற்சியில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான கருப்பு நிற பிட்ச்சை இந்திய அணி பயன்படுத்தி பேட்டிங் செய்து வருகிறது.
மறுபுறம் சிவப்பு நிற பிட்ச்சில் வேகப் பந்துவீச்சாளர்கள் மட்டும் பந்து வீசி பயிற்சி செய்து வருகிறார்கள். இப்படி இரண்டு விதமான பிட்ச்களை தயார் செய்து ஒரே நேரத்தில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கும், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கும் இந்திய அணி தன்னை தயார் செய்து வருகிறது. 2019 இல் வங்கதேச அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது.
அப்போது இரண்டு போட்டிகளிலும் இந்திய அணியின் மூன்று வேகப் பந்துவீச்சாளர்கள் மொத்தம் 33 விக்கெட்களை வீழ்த்தினார்கள். அப்போது இந்திய அணியின் முதன்மை சுழற் பந்துவீச்சாளர்களான அஸ்வின் ஐந்து விக்கெட்டும், ஜடேஜா விக்கெட் இன்றியும் இருந்தனர். அந்த அளவுக்கு இந்திய அணி வேகப் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான பிட்ச்களை இந்தியாவில் தயாரித்து வருகிறது.
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, கே எல் ராகுல், சர்ஃபராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ரவீந்திர ஜடேஜா , அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.