மும்பை: இந்திய அணியின் சிறந்த கேப்டன் யார் என்ற விவாதத்தில் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கலந்து கொண்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்திய முன்னாள் கேப்டன் தோனியை விடவும் ரோஹித் சர்மா ஒரு படி மேல் வைப்பேன் என்று அவர் கூறியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியை இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மிக முக்கியமான காரணமாக அமைந்துள்ளார். ஏனென்றால் சுமார் இரண்டரை நாட்கள் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், வெறும் 6 செஷனில் இந்திய அணி போட்டியை வென்றுள்ளது.

இதற்கு இந்திய அணி 34.2 ஓவர்களில் 285 ரன்களை விளாசியதே காரணம். இந்த முடிவை ரோஹித் சர்மா அணி வீரர்களிடம் கூறி, அதற்கேற்ப திட்டங்களுடன் களமிறங்கியது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட டிரா உறுதி என்று ரசிகர்கள் பலரும் நினைத்திருந்த சூழலில், இந்திய அணி முடிவுக்காக போராடியதால், இந்த வெற்றி வரலாற்று சிறப்புமிக்கமாக மாறியுள்ளது.
இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பேசுகையில், என்னை பொறுத்தவரை தோனியை விடவும் ரோஹித் சர்மாவை தான் சிறந்த கேப்டனாக கூறுவேன். ஏனென்றால் ரோஹித் சர்மா எப்போதும் மக்களின் கேப்டனாக இருந்திருக்கிறார். அவர் எப்போதும் எந்த வீரரிடம் சென்று, அவரிடம் என்ன திட்டம் இருக்கிறது என்று கேட்க கூடியவர். அதேபோல் அணி வீரர்களுடன் சிறப்பாக கனெக்ட் செய்து கொள்வார்.
ஆனால் தோனியின் ஸ்டைல் வேறு மாதிரியானது. அவர் யாரிடமும் பேசவே மாட்டார். தோனி தனது எண்ணங்களை மிக எளிதாக தனது சைலன்ஸ் மூலமாக பவுலருக்கு கடத்தக் கூடியவர். அதுதான் தோனியின் ஸ்டைல் என்றும் சொல்லலாம். நிச்சயம் இவர்கள் இருவருமே வித்தியாசமான தலைவர்கள் தான். அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை.
ஆனால் தோனி எப்போதும் ஒரு வீரரிடம் சென்று, என்ன ஃபீல்ட் வேண்டும் என்று கேட்க மாட்டார். அந்த பவுலர் தனது தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று தோனி விரும்புவார். ஆனால் ரோஹித் சர்மா நேரடியாக எந்த வீரருடனும் ஆரோக்கியமான உரையாடலை நடத்தக் கூடியவர். இளம் வீரர்களை அரவணைத்து அவர்களுக்கு சொல்லி கொடுப்பவர். அ
வர்களிடம் இருந்து இந்திய அணிக்கு என்ன தேவை, அவர்கள் ஏன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று தெளிவாக கூறி நம்பிக்கையை அதிகரிக்க செய்வார் என்று தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே ரோஹித் சர்மா சிறந்த கேப்டனா அல்லது தோனி சிறந்த கேப்டனா என்ற விவாதம் ரசிகர்களிடையே நடந்து வருகிறது. இதில் ஹர்பஜன் சிங்கும் பங்கேற்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.