
வெற்றி கட்டாயம்
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்து இருந்தது. அதனால், தொடரை வெல்ல வேண்டும் என்றால், அடுத்த இரு போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தது.

இந்தியா வெற்றி
இரண்டாவது போட்டியில் வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்து 153 ரன்கள் குவித்தது. அதை சேஸிங் செய்த இந்திய அணி 15.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.

மீண்டும் தவறுகள்
முதல் போட்டியில் இந்திய அணி பீல்டிங் மற்றும் டிஆர்எஸ்-இல் நிறைய தவறுகள் செய்தது தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. இரண்டாவது போட்டியில் வென்றாலும், இந்திய அணி இந்த முறையும் பல சொதப்பல்களை செய்தது.

கலீல் அஹ்மது
கலீல் அஹ்மது முதல் போட்டியில் ரன்களை வாரி வழங்கி இருந்தாலும், இரண்டாவது போட்டியில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் கேப்டன் ரோஹித் சர்மா. கடந்த போட்டியில் தான் வீசிய கடைசி நான்கு பந்துகளில் ஃபோர் கொடுத்திருந்த கலீல் அஹ்மது, இந்தப் போட்டியில் தான் வீசிய முதல் மூன்று பந்துகளில் ஃபோர் கொடுத்து அதிர்ச்சி அளித்தார்.

ரன்னை வாரி வழங்கினார்
தொடர்ந்து ஏழு பந்துகளில் ஃபோர் கொடுத்து கடும் விமர்சனத்தை சந்தித்தார் கலீல் அஹ்மது. இந்தப் போட்டியில் 4 ஓவர்களில் 44 ரன்கள் வாரிக் கொடுத்து இருந்தார். மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் குறைவாக ரன்கள் கொடுத்த நிலையில், இவரது பந்துவீச்சு மட்டுமே மோசமாக அமைந்தது.

பண்ட் ஸ்டம்பிங் வாய்ப்பு
ரிஷப் பண்ட் முதல் போட்டியில் டிஆர்எஸ் வாய்ப்புகளில் சொதப்பி இருந்தார். அவர் இந்த முறை 6வது ஓவரில் ஸ்டம்பிங் வாய்ப்பு ஒன்றில் அடிப்படை தவறு செய்து விக்கெட் வாய்ப்பை கோட்டை விட்டதோடு, அதை நோ பால் ஆகவும் மாற்றினார்.

ரோஹித் சர்மா கோபம்
பந்தை ஸ்டம்ப்புகளுக்கு முன்பே பிடித்து ஸ்டம்பிங் செய்தது தான் அவர் செய்த அடிப்படை தவறு. அதைக் கண்டு கேப்டன் ரோஹித் சர்மா கோபம் அடைந்தார். ஆனால், அவரும் அடுத்த ஓவரில் கேட்ச் ஒன்றை நழுவ விட்டார்.

கேட்ச் நழுவல்
7வது ஓவரில் லிட்டன் தாஸ் அடித்த பந்தை ரோஹித் சர்மா பிடித்திருக்க வேண்டும். ஆனால், அந்த கேட்ச்சை பிடிக்க ரிஷப் பண்ட் மற்றும் சிவம் துபே முயன்றனர். அதனால் குழப்பத்தில் ரோஹித் சர்மா பந்தை பிடிக்க தயக்கம் காட்டி கேட்ச்சை கோட்டை விட்டார்.

பண்ட் தவறவிட்ட வாய்ப்பு
முதலில் ஸ்டம்பிங் வாய்ப்பில் சொதப்பிய பண்ட் அடுத்து சில ஓவர்கள் கழித்து சரியாக ஸ்டம்பிங் செய்து இருந்தார். அடுத்து 12வது ஓவரில் அவருக்கு ஒரு கடினமான கேட்ச் வந்தது. அதை நழுவ விட்டார் பண்ட். ஒருவேளை இந்த கடினமான கேட்ச்சை அவர் பிடித்திருந்தால், அவர் செய்த தவறுகளை மறந்திருக்கலாம்.

காப்பாற்றிய ரோஹித்
பந்துவீச்சின் போது இந்திய அணி தவறுகள் செய்தாலும், 154 ரன்கள் என்ற சற்றே கடின இலக்கை இந்தியா எந்த பிசிறும் இல்லாமல் எட்டியது.அதற்கு முழு காரணம் ரோஹித் சர்மா தான். 43 பந்துகளில் 85 ரன்கள் அடித்து மிரட்டினார் அவர்.


Click it and Unblock the Notifications