கான்பூர் : இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் 27 ஆம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற்ற போது ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆடுகளத்தில் செம்மண் கலக்கப்பட்டு இருந்தது. மேலும் வானிலையும் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக செயல்பட்டது. இதன் காரணமாக இரண்டு அணிகளுமே மூன்று சுழல் பந்துவீச்சாளர்களுக்கு பதில் 3 வேகப்பந்துவீச்சாளர் வைத்து விளையாடினார்கள்.

இந்தியா செய்தது மிகவும் சரியான முடிவு என்று பலரும் பாராட்டினார்கள். ஏனென்றால் வங்கதேச அணியில் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இதனால் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தை தயாரித்தால் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதனை எதிர்கொள்ள தடுமாறுவார்கள் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளம் தயாரிப்பதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது இந்திய அணி வீரர்களால் ஒரு அளவுக்கு சிறப்பாக விளையாட முடியும் என்றும் அவர்கள் கணித்திருந்தனர். இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயாரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான களிமண்ணை ஆடுகளத்தில் பராமரிப்பாளர்கள் கலந்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் பந்தின் பவுன்ஸ் குறைந்த அளவிலே இருக்கும். அது மட்டுமல்லாமல் டாஸ் வென்று பேட்டிங் முதலில் செய்யும் அணிக்கு கூடுதல் சாதகமாக இருக்கும். முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடிக்கும் அணி வெற்றியை பெரும்.
இதேபோன்று போட்டி செல்ல செல்ல ஆடுகளம் முற்றிலும் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக மாறிவிடும். இதனால் முதல் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் தொடரும். இதனால் இந்திய அணி இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களுக்கு பதில் மூன்று சுழல் பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட போவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
இதனால் ஆகாஷ் தீப் அல்லது முகமது சிராஜ்க்கு பதில் அக்சர் பட்டேல் அல்லது குல்தீப் யாதவ் சேர்க்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலையில் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்டால் இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாறுவார்கள் என கிரிக்கெட் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்கள்.