கான்பூர்: வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு பதிலாக உள்ளூர் வீரர்களான குல்தீப் யாதவ் மற்றும் யாஷ் தயாள் விளையாட வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.
வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 376 ரன்கள் குவித்த நிலையில், வங்கதேசம் அணி 149 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்பின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 287 ரன்கள் கூடுதலாக சேர்க்க, வங்கதேசம் அணி வெற்றிக்கு 515 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய வங்கதேசம் அணி 234 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன் மூலமாக இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்து நேற்றிரவே புறப்பட்டனர். அடுத்த டெஸ்ட் போட்டி கான்பூர் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதற்காக இந்திய அணி வீரர்கள் கூடுதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல் உள்ளிட்ட சீனியர்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தீர்மானமாக உள்ளனர். இதனிடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
கான்பூர் மைதானம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். இதனால் ஒரு வேகப்பந்துவீச்சாளரை பெஞ்ச் செய்துவிட்டு, உள்ளூர் கிரிக்கெட் வீரரான குல்தீப் யாதவை களமிறக்க இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல் மற்றொரு உள்ளூர் வீரரான யாஷ் தயாளையும் களமிறங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இடதுகை வேகப்பந்துவீச்சாளரான யாஷ் தயாள் துலீப் டிராபியில் சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார். லைன் மற்றும் லெந்தில் சிறப்பாக இருந்ததால், ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு நிச்சயம் தேவைப்படுவார் என்று இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடருக்கு முன் தேவையான கேம் டைம் கொடுக்கப்பட வேண்டும்.
இதனால் வங்கதேசம் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியிலேயே விளையாட வைக்க வாய்ப்புகள் உள்ளது. அவரும் உத்தரப் பிரதேச வீரர் என்பதால், உள்ளூர் மைதானத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை நன்றாக அறிவார். அவர் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பும்ரா மற்றும் ஆகாஷ் தீப் இருவருக்கும் ஓய்வு அளிக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.