சென்னை: வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 124 பந்துகளில் சதம் அடித்து அசத்தியுள்ளார். 634 நாட்களுக்கு பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பண்ட், முதல் போட்டியிலேயே சதம் அடித்திருப்பது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் 634 நாட்களுக்கு பின் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுத்துள்ளார். கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சையில் இருந்தார்.

பின்னர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய அவர், டி20 உலகக்கோப்பை தொடருக்கு நேரடியாக தேர்வு செய்யப்பட்டார். சிறப்பாக செயல்பட்ட ரிஷப் பண்ட், பின்னர் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடினார். இருந்தாலும் ரிஷப் பண்ட்-ன் அசல் களமான டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்போது களமிறங்குவார் என்பதே எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரிஷப் பண்ட் களமிறக்கப்பட்டார். இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய ரிஷப் பண்ட், 39 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 67 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது ரிஷப் பண்ட் மீண்டும் களம் புகுந்தார்.
2வது நாளில் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்ட், இன்று 3வது நாள் ஆட்டத்தை அதிரடியாக தொடங்கினார். பவுண்டரிகளாக விளாசி அசத்திய ரிஷப் பண்ட், வேகப்பந்துவீச்சாளர்களை எச்சரிக்கையுடன் அணுகினார். தொடர்ந்து மெஹதி ஹசன் பவுலிங்கில் ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து அசத்தினார். இதன்பின் ரிஷப் பண்ட் அதிரடி அடுத்த கட்டத்திற்கு சென்றது. ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியை விளாச தொடங்கினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோரும் வேகமாக உயரத் தொடங்கியது.
உணவு இடைவேளைக்கு பின் மீண்டும் அதிரடியை தொடர்ந்த ரிஷப் பண்ட் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப 124 பந்துகளில் ரிஷப் பண்ட் சதத்தை எட்டி சாதனை படைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 6வது சதம் இதுவாகும். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய இந்திய விக்கெட் கீப்பரான தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.