மும்பை: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அதற்கு முக்கிய காரணம் அவரது நண்பரும், இந்திய அணியின் துணைப் பயிற்சியாளருமான அபிஷேக் நாயர் தான். இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதும் டெஸ்ட் தொடர் இன்னும் மூன்று வாரங்களில் துவங்க உள்ளது.
அதற்கு முன்னதாக இந்திய வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் துலீப் டிராபி டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதில் ரோஹித் சர்மா பங்கு பெறவில்லை. அதே சமயம், இந்த மூன்று வாரங்களும் அவர் ஓய்வில் இருக்கப் போதும் இல்லை என தெரிய வந்துள்ளது. தற்போது அவர் மும்பையில் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு இருக்கிறார்.

நேற்று இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயரும் தனது நீண்ட நாள் நண்பருமான அபிஷேக் நாயருடன் மும்பையில் உள்ள கிரிக்கெட் மைதானம் ஒன்றுக்கு சென்றார் ரோஹித் சர்மா. அங்கு அவர் தீவிரமான கார்டியோ பயிற்சியில் ஈடுபட்டார். பேட்டிங் பயிற்சியை தாண்டி, அவர் தனது உடற்தகுதியை மேம்படுத்த இந்த பயிற்சியில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இதன் பின்னணியில் அபிஷேக் நாயர் இருப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். ஐபிஎல் தொடரில் பல அதிரடி பேட்ஸ்மேன்களை உருவாக்கியவர் அபிஷேக் நாயர். தினேஷ் கார்த்திக் ஒரு சமயம் பேட்டிங்கில் தடுமாறி வந்த போது அபிஷேக் நாயர் அவருக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து, அவரை அதிரடி ஃபினிஷராக மாற்றினார். அப்போது முதல் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் வாழ்வு உச்சத்திற்கு சென்றது.
அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர், அங்கு பல இளம் இந்திய வீரர்களுக்கு அதிரடியாக பேட்டிங் ஆடுவது குறித்த பயிற்சியை அளித்தார். அதில் ஒருவர் தான் ரிங்கு சிங். அவர் இன்று இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
தற்போது இந்திய அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டு வரும் அபிஷேக் நாயர், ரோஹித் சர்மாவுக்கு தனிப்பட்ட முறையில் பயிற்சி அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஏற்கனவே அதிரடியாகவே உள்ளது. எனினும், அவரது உடற்தகுதி குறித்து பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆடுகளத்தில் ரோஹித் சர்மா இதுவரை எந்தவிதமான பலவீனத்தையும் வெளிப்படுத்தியது இல்லை. அப்படி இருந்தும் அபிஷேக் நாயர் அவரது உடலை கட்டுக் கோப்பாக மாற்ற முடிவு செய்து இருக்கிறார்.