ஆன்டிகுவா : டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்த்து இந்திய அணி களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி கேப்டன் ஷான்டோ பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணி தரப்பில் ஜாம்பவான் வீரர்களான விராட் கோலி - ரோகித் சர்மா கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது.
கடந்த 10 டி20 போட்டிகளில் இந்திய அணி தரப்பில் களமிறங்கிய தொடக்க வீரர்கள், ஒரேயொரு முறை மட்டும் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கின்றனர். டி20 உலகக்கோப்பையில் தொடக்கம் கொடுத்து வரும் விராட் கோலி - ரோகித் சர்மா இருவரும் ஒருமுறை கூட 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இதனால் இந்த போட்டியிலாவது வரலாற்றை மாற்றுவார்களா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அதுமட்டுமல்லாமல் அயர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய ரோகித் சர்மா, அதன்பின் நல்ல தொடக்கம் கிடைத்த போதும் பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. இதனால் ரோகித் சர்மா அவசரப்படாமல் நல்ல ஸ்கோரை எடுத்து ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் விவாதித்து வந்தனர். இந்த நிலையில் வங்கதேசம் அணி தொடக்கத்திலேயே ஸ்பின்னரை வைத்து தொடங்கியது.
முதல் ஓவரிலேயே ரோகித் சர்மா பவுண்டரி அடிக்க, ஷகிப் அல் ஹசன் பவுலிங்கில் மீண்டும் ஸ்வீப் ஷாட் மூலமாக பவுண்டரியை விளாசினார். பின்னர் மீண்டும் ஷகிப் அல் ஹசன் வீசிய 4வது ஓவரின் முதல் பந்திலேயே ரோகித் சர்மா டவுன் தி ட்ராக் இறங்கி வந்து அபாரமாக ஒரு சிக்சரை விளாசினார். இதன் மூலம் ரோகித் சர்மா ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கரோஷம் எழுப்பி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
ஆனால் வர்ணனையாளர்கள் பாராட்டி முடிக்கும் முன் மீண்டும் ஷகிப் அல் ஹசன் பந்தில் சிக்சரை அடிக்க முயன்று 11 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து வெளியேறினார். ரோகித் சர்மா இறங்கி வருவதை அறிந்து ஷகிப் அல் ஹசன் லெந்தை கொஞ்சம் மாற்றியதோடு, காற்றின் வேகத்திற்கு ஏற்பவும் வீசி விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் மீண்டும் ரோகித் சர்மா நல்ல தொடக்க கிடைத்தும் சொதப்பிவிட்டதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.