40 பந்துகளில் சம்பவம்.. 8 சிக்ஸ், 9 பவுண்டரி.. இந்திய அணிக்காக 2வது அதிவேக சதம் அடித்த சஞ்சு சாம்சன்
ஐதராபாத்: வங்கதேச அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இதன் மூலமாக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் சஞ்சு சாம்சன் 2வது இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்பின் சஞ்சு சாம்சன் - அபிஷேக் சர்மா கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காட்டிய சஞ்சு சாம்சன், 2வது ஓவரில் தொடர்ச்சியாக 4 பவுண்டரிகளை விளாசி அதிரடிக்கு திரும்பினார்.

இதன்பின் அபிஷேக் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழக்க, கேப்டன் சூர்யகுமார் யாதவ் உடன் இணைந்து சஞ்சு சாம்சன் வெளுத்து வாங்கினார். ஒவ்வொரு ஓவரிலும் கட்டாயம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாச வேண்டும் என்ற உறுதியுடன் சஞ்சு சாம்சன் பொளந்து கட்டினார். இதன் மூலமாக 22 பந்துகளிலேயே அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன், பின்னர் அதிரடியை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு சென்றார்.
இந்த நிலையில் 10வது ஓவரை வீசிய ரிஷாத் ஹொசைன் பவுலிங்கில் தொடர்ச்சியாக 5 சிக்சர்களை சஞ்சு சாம்சன் விளாச, ரசிகர்கள் மிரண்டு போயினர். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 152 ரன்களாக உயர்ந்தது. அதேபோல் சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 92 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால் அவர் சதம் அடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அப்போது மெஹதி ஹசன் வீசிய 13வது ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்த சஞ்சு சாம்சன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை விளாசி சாதனை படைத்தார். 40 பந்துகளில் 8 சிக்ஸ், 9 பவுண்டரி உட்பட சஞ்சு சாம்சன் சதமடித்து புதிய சாதனையை படைத்தார். இந்த சதத்தின் மூலமாக இந்திய அணிக்காக குறைந்த பந்துகளில் சதம் விளாசிய 2வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன்பாக 2017ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதமடித்ததே சாதனையாக இருந்து வருகிறது. இதற்கு சஞ்சு சாம்சன் 40 பந்துகளில் சதமடித்து 2வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 45 பந்துகளில் சதமடித்து 3வது இடத்திலும் உள்ளனர். இந்த சதத்தின் மூலமாக சஞ்சு சாம்சன் இந்திய டி20 அணியில் நிரந்தர இடத்தை பிடித்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிறப்பாக ஆடிய சஞ்சு சாம்சன் 47 பந்துகளில் 8 சிக்ஸ், 11 பவுண்டரி உட்பட 111 ரன்கள் எடுத்து முஸ்தாஃபிசுர் ரஹ்மான் பவுலிங்கில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதனைத் தொடர்ந்து பெவிலியன் நோக்கி நடந்து சென்ற சஞ்சு சாம்சனுக்கு மைதானத்தில் அமர்ந்திருந்த அத்தனை ரசிகர்களும் எழுந்து நின்று பாராட்டு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications