துபாய்: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் அபாரமாக சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முகமது சமி ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினாலும், கில் கடினமான ஆடுகளத்தில் பேட்டிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தார்.
இதனால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கில், "இது நான் விளையாடியது இல்லை மிகவும் திருப்திகரமான இன்னிங்ஸ்களில் இதுவும் ஒன்று. ஐசிசி தொடரின் நான் அடித்த முதல் சதம் இதுவாகும்".

"நானும் ரோகித் சர்மாவும் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது பந்தை அடிக்க நாங்கள் கொஞ்சம் சிரமம் பட்டோம். ஸ்டெம்ப் வெளியே செல்லும் பந்தை அடித்து ஆட முடியவில்லை. காரணம் ஆடுகளம் தோய்வாக இருந்ததால் பேட்டிற்கு பந்து வரவில்லை. எனவே நான் வேகபந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது கொஞ்சம் இறங்கி வந்து விளையாடினேன்".
"இதேபோன்று சுழற் பந்துவீச்சாளர்கள் பந்து வீசும் போதும் பேட்டிங் செய்ய கடினமாக இருந்தது. நானும் விராட் கோலியும் இணைந்து சிங்கிள்ஸ் எடுக்க கூட தடுமாறினோம். பிரண்ட் புட்டை எடுத்து விளையாட முடியவில்லை. இதனால் பேக் புட்டில் விளையாடுவதில் கவனம் செலுத்தினோம். ஒரு கட்டத்தில் எங்கள் மீது கடும் நெருக்கடி இருந்தது".
"இதனால் நாங்கள் அதிக சிங்கிள்ஸ் எடுத்து விளையாட முயற்சி செய்தோம். ஆனால் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து எங்களுக்கு ஒரு செய்தி வந்தது. ஏதேனும் ஒரு பேட்ஸ்மேன் கடைசி வரை களத்தில் நின்று போட்டியை முடிக்க வேண்டும் என சொல்லி அனுப்பினார்கள். அதன்படியே நடந்தோம். முதலில் நான் சிக்ஸர் அடித்த போது அது எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்தது. இரண்டாவது சிக்ஸர் அடிக்கும் போது அது என் சதம் அருகே என்னை கொண்டு சென்றது. இரண்டு சிக்ஸருமே எனக்கு திருப்திகரமாக இருந்தது" என கில் தெரிவித்துள்ளார்.