மிரட்டிவிட்ட பும்ரா, பிரசித் ஸ்பெல்.. ரன் அடிக்கவே திணறிய இங்கிலாந்து.. 7 ஓவர் வரை கதறிய பெத்தேல்
பர்மிங்காம்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களான ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தங்களது அசாத்திய பந்துவீச்சால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை நிலைகுலையச் செய்தனர்.
பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஓவர்களை வீசிய ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா நெருப்பைக் கக்கும் பந்துவீச்சை வெளிப்படுத்தினர். முதல் 7 ஓவர்களில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களால் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதில் பும்ரா தனது 4 ஓவர்களில் வெறும் 8 ரன்கள் மட்டுமே கொடுத்தார். அவருக்கு ஈடுகொடுத்து வீசிய பிரசித் கிருஷ்ணா, 1 மெய்டன் ஓவர் உட்பட 3 ஓவர்களில் 8 ரன்கள் மட்டுமே கொடுத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுத்தார்.
இந்தியாவின் இந்த அபாரமான பந்துவீச்சால் இங்கிலாந்து தொடக்க வீரர்களான பென் டக்கெட் மற்றும் ஜேக்கப் பெத்தேல் ஆகியோர் ரன் அடிக்க முடியாமல் திணறினர். குறிப்பாக ஜேக்கப் பெத்தேல் தனது முதல் ரன்னை எடுக்க 13 பந்துகளை எதிர்கொண்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு ஓவல் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து ஜாம்பவான் அலஸ்டர் குக் தனது முதல் ரன்னை எடுக்க 18 பந்துகளை எதிர்கொண்டார். அந்த நிகழ்வுக்கு பிறகு, ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து தொடக்க வீரர் ஒருவர் முதல் ரன்னை எடுக்க அதிக பந்துகளை எதிர்கொண்ட 2வது மோசமான சாதனையை பெத்தேல் படைத்துள்ளார்.
பும்ராவும், பிரசித் கிருஷ்ணாவும் இங்கிலாந்துக்கு அணை போட்டு ரன் குவிப்பை தடுத்து இருந்த நிலையில், 8வது ஓவரை வீச அறிமுக வீரர் குர்னூர் பிரார் அழைக்கப்படார். ஆனால், அவரது முதல் ஓவரிலேயே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தங்களது அதிரடியைக் காட்டி 17 ரன்களைக் குவித்தனர். இதனால் இந்திய அணி உருவாக்கியிருந்த கடும் அழுத்தம் தற்காலிகமாகத் தளர்ந்தது.


Click it and Unblock the Notifications
