IND vs ENG: பவுண்டரி லைனில் பும்ரா பிடித்த கேட்ச்.. போட்டியையே மாற்றிய அந்த 2 பந்து
பர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரர் பும்ரா ஒரு அபாரமான கேட்சை பவுண்டரி லைனில் பிடித்து அசத்தினார். மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி பர்மிங்காம் நகரில் இன்று தொடங்கியது.
இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் மற்றும் ஜாக்கப் பெத்தல் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை விளையாடினர்.

ஜாக்கப் பெத்தல், டெஸ்ட் கிரிக்கெட் போல் விளையாடி 31 பந்துகளில் 14 ரன்கள் சேர்த்த நிலையில் டக்கட் அதிரடி காட்டி ஆறு பவுண்டரி, இரண்டு சிக்சர் என 45 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்திருந்தது. இந்த நிலையில் தான் குர்னூர் பிரார் வீசிய 13 வது ஓவரில் திருப்புமுனை ஏற்பட்டது.
இதில் ஜாக்கப் பெத்தல் இரண்டாவது பந்தில் ஆட்டம் இழக்க, நான்காவது பந்தில் பென் டக்கட் அடித்த பந்தை சிக்ஸர் லைனில் நின்று கொண்டிருந்த பும்ரா அதனை அபாரமாக பிடித்தார். அது மட்டும் இல்லாமல் எல்லைக்கோட்டு அருகே நின்று கொண்டிருந்ததால் கால் சிக்சர் லைனில் பட்டுவிடுமோ என்பதை அஞ்சி பும்ரா பந்தை பிடித்துவிட்டு மீண்டும் தூக்கி எறிந்தார்.
அந்த இடைப்பட்ட நேரத்தில் தனது பேலன்ஸை சரி செய்து கொண்ட பும்ரா சிக்சர் லைனில் கால் வைக்காமல் மீண்டும் பந்தை பிடித்து கேட்சை நிறைவு செய்தார். இது அவுட்டா இல்லையா என மூன்றாம் நடுவரின் உதவி கோரப்பட்டது. இதில் ரீப்ளே காட்சிகள் பல கோணங்களில் பார்க்கப்பட்டது. அதில் பும்ரா தெளிவான ஒரு கேட்சை பிடித்தது உறுதியானது.
இதனை அடுத்து பென் டக்கட் 43 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இந்த ஒரு கேட்ச் ஆட்டத்தில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறது. பொதுவாக இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் இப்படிப்பட்ட கேட்ச்களை பிடிப்பது அரிது. தற்போது பும்ரா அதனை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications

