IND vs ENG: ஹிட்மேன் வெறியாட்டம்.. மெகா சிக்ஸர் சாதனை.. கிறிஸ் கெயில் ரெக்கார்டை உடைத்த ரோஹித் சர்மா
கட்டாக்: ரோஹித் சர்மா சிக்ஸர் அடிப்பதில் ஏற்கனவே பல சாதனைகளை படைத்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேலும் ஒரு முக்கிய சாதனையை முறியடித்துள்ளார். சிக்ஸர் மன்னன் கிறிஸ் கெயிலின் ஒருநாள் போட்டி சாதனையை அவர் முறியடித்தார். இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா தனது 32 வது ஒருநாள் போட்டி சதத்தையும் நிறைவு செய்தார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் நகரில் உள்ள பாரபத்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் எடுத்தது.

305 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி களம் இறங்கியது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினார். இரண்டாவது ஓவரிலேயே ஒரு ஃபோர் மற்றும் ஒரு சிக்ஸ் அடித்தார். அதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். முன்னதாக கிறிஸ் கெயில் 331 சிக்ஸர்களுடன் இருந்தார். தற்போது அவரை விட அதிக சிக்ஸ் அடித்து இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார் ரோஹித் சர்மா.
ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸ் அடித்த வீரர்கள் பட்டியலில் பாகிஸ்தான் அணியின் ஷாஹித் அப்ரிடி முதல் இடத்தில் இருக்கிறார். அவர் இதுவரை 351 சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். விரைவில் ரோஹித் சர்மா அந்த சாதனையையும் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் சிக்ஸர் மன்னனாக மாறி வருகிறார் "ஹிட்மேன்" ரோஹித் சர்மா.
இந்த போட்டியில் அதன் பின்னரும் ரோஹித் சர்மா அதிரடியாக ஆடினார். மூன்றாவது ஓவரில் ஒரு சிக்ஸ், ஐந்தாவது ஓவரில் ஒரு சிக்ஸ், எட்டாவது ஓவரில் ஒரு சிக்ஸ் என வரிசையாக சிக்ஸர்களை விளாசினார். அவரது அதிரடியால் இந்திய அணி எட்டு ஓவர்களிலேயே 64 ரன்கள் எடுத்தது.
அதன் பின்னரும் அதிரடி ஆட்டம் ஆடிய ரோஹித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். பின்னர் 76 பந்துகளில் சதம் கடந்தார். அவர் 90 பந்துகளில் 119 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 12 ஃபோர் மற்றும் 7 சிக்ஸ் அடித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications