IND vs ENG: என்ன பண்ணி வச்சிருக்க உனக்கு.. ஹர்ஷித்தை சைகை காட்டி மோசமாக திட்டிய கேப்டன் ரோஹித் சர்மா
கட்டாக்: இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை கடுமையாக கடிந்து கொண்டார். இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணி 31 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்து ஆடி வந்தது.

32வது ஓவரில் ஹர்ஷித் ராணா பந்து வீசினார். அப்போது ஜோஸ் பட்லர் அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளையும் டாட் பால்களாக ஆடினார். ஐந்தாவது பந்தையும் அவர் டாட் பாலாகவே ஆடினார். ஆனால் ஹர்ஷித் ராணா பந்தை எடுத்து ரன் அவுட் செய்வது போல வேகமாக வீசினார். அதற்கு அவசியம் இல்லை என்ற போதும் அவர் அவ்வாறு செய்தார். பந்து இடது பக்கம் விலகிச் சென்று பவுண்டரி கோட்டை அடைந்தது. அதனால் இங்கிலாந்து அணிக்கு இலவசமாக நான்கு ரன்கள் கிடைத்தது.
அதை பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா கடும் கோபமடைந்தார். ஹர்ஷித் ராணாவை பார்த்து "என்ன பண்ணி வச்சிருக்க.. உனக்கு மூளை இருக்கிறதா?" என சைகை செய்து கோபமாக பேசினார். ஹர்திக் பாண்டியாவும் அப்போது கோபமடைந்து இருந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் உடனடியாக பரவியது.
ரோஹித் சர்மா செய்ததை சிலர் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டாலும், சிலர் அதை விமர்சித்து வருகின்றனர். ஹர்ஷித் ராணா செய்தது தவறுதான் என்றாலும் மைதானத்தில் வைத்து ஒரு கேப்டன் தனது வீரர்களை சகட்டுமேனிக்கு திட்டக்கூடாது என கூறி வருகின்றனர்.
இதற்கு முன்பும் ரோஹித் சர்மா ஆடுகளங்களில் வைத்து வீரர்களை திட்டியிருக்கிறார். ஆனால் அதன் பின் அவர் அந்த வீரர்களுடன் இயல்பாகவே நடந்து கொள்வார் என்பதால் இதை பெரிய சர்ச்சையாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை எனவும் சிலர் கூறி உள்ளனர்.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 304 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பென் டக்கெட் 65 ரன்கள், ஜோ ரூட் 69 ரன்களும் எடுத்தனர். லியாம் லிவிங்ஸ்டோன் 41 ரன்கள் சேர்த்தார். ஜோஸ் பட்லர் 34 ரன்கள் எடுத்தார்.


Click it and Unblock the Notifications