விசாகப்பட்டினம் : இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 4 ஸ்பின்னர்களுடன் களமிறங்கவும் பயமில்லை என்று இங்கிலாந்து பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இங்கிலாந்து அணி சாதித்துள்ளது. இதனால் 2012ஆம் ஆண்டுக்கு மீண்டும் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணி உள்ளது. பேஸ் பால் அணுகுமுறையுடன் விளையாடி வரும் இங்கிலாந்து அணி தோல்வியை பற்றி பயமின்றி வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் விளையாடி வருகிறது.

சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் இந்திய மண்ணிலும் இப்படியான ஆட்டத்தை இங்கிலாந்து அணி வெளிப்படுத்துவது தான் பலருக்கும் ஆச்சரியம். அதிலும் அறிமுக ஸ்பின்னரை வைத்து இந்திய அணியை சுருட்டியதை யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இதனிடையே இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் விசாகப்பட்டினத்தில் நடக்கவுள்ளது.
இந்த போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விராட் கோலி ஏற்கனவே விலகிய நிலையில், கேஎல் ராகுல் மற்றும் ஜடேஜா இருவரும் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதனால் இங்கிலாந்து அணி முழு அட்டாக்கை செய்து 2-0 என்று முன்னிலை பெற ஆயத்தமாகி வருகிறது.
இதுகுறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கல்லம் பேசுகையில், இங்கிலாந்து அணியின் ஸ்பின்னர் ஜாக் லீச்சின் கால் விரலில் காயம் ஏற்பட்டுள்ளது. ஆனால் சோயப் பஷீர் இந்தியாவில் இங்கிலாந்து அணியுடன் இணைந்துவிட்டார். விசாகப்பட்டினம் மைதானமும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக இருந்தால், நாங்கள் 4 ஸ்பின்னர்களுடம் களமிறங்குவதற்கும் தயாராக இருக்கிறோம்.
எங்களுக்கு தோல்வியை பற்றிய பயம் கிடையாது. மார்க் வுட்டிற்கு ஓய்வு வழங்கி, கூடுதல் பேட்ஸ்மேனையும் சேர்த்துக் கொள்வோம். டாம் ஹார்ட்லியை பொறுத்தவரை அவரை பென் ஸ்டோக்ஸ் பயன்படுத்திய விதம் அற்புதமானது. அவர் முதல் இன்னிங்ஸில் அவ்வளவு ரன்கள் விட்டுக் கொடுத்தும் இங்கிலாந்து அணி அவர் மீது நம்பிக்கை வைத்தது.
அதே நம்பிக்கையுடன் அறிமுக போட்டியிலேயே இங்கிலாந்து அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார். அவர் முதல்தர போட்டிகளில் வெறும் 40 விக்கெட்டுகளை தான் வீழ்த்தி இருக்கிறார். ஆனாலும் அவரை தேர்வு செய்ததற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும். சில நேரங்கள் தேர்வு முடிவுகளில் இப்படிதான் முடிவெடுக்க வேண்டும். ஆஸ்திரேலிய அணியின் நேதன் லயன் 40 விக்கெட்டுகள் எடுத்திருந்த போது தான், ஆஸ்திரேலியா அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.