லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில், இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ஆகாஷ் தீப்பின் அசாதாரண ஆட்டம் கிரிக்கெட் உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்த இருவரின் செயல்பாட்டையும் பாராட்டியுள்ளார். ஜெய்ஸ்வால் அடித்த சதத்தையும், ஆகாஷ் தீப் நைட் வாட்ச்மேனாக வந்து அரைசதம் அடித்ததையும் சுட்டிக் காட்டி இருக்கிறார் சச்சின்.
மும்பையில் இருந்து இந்திய கிரிக்கெட்டின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த சச்சின் டெண்டுல்கர், எதிர்கால நட்சத்திரமாக உருவெடுத்து வரும் மற்றொரு மும்பை வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை மனம் திறந்து புகழ்ந்துள்ளார். பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருந்த ஓவல் ஆடுகளத்தில், இந்திய அணியின் முதுகெலும்பாக நின்று, இரண்டாவது இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால் 118 ரன்கள் குவித்தார். இந்தத் தொடரின் முதல் போட்டியிலும் சதம் அடித்திருந்த அவர், கடைசிப் போட்டியிலும் சதம் அடித்து தனது முத்திரையைப் பதித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் (X) சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட சச்சின், "தைரியத்தையும், மன உறுதியையும் சோதித்த ஒரு சவாலான ஆடுகளத்தில் யஷஸ்வி அடித்த சதம் மிகச் சிறப்பானது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் போட்டியில் அடிக்கப்பட்ட முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் நாள் முடிவில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உறுதுணையாகக் களமிறங்கியவர், நைட்வாட்ச்மேன் ஆகாஷ் தீப். நான்காவது வீரராகக் களமிறங்கிய அவர், யாரும் எதிர்பாராத வகையில் மிக உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 66 ரன்கள் குவித்தார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அவர் அமைத்த 107 ரன்கள் பார்ட்னர்ஷிப், இந்திய அணி வலுவான நிலையை அடைய முக்கிய காரணமாக அமைந்தது.
ஆகாஷ் தீப்பின் இந்த ஆட்டத்தையும் சச்சின் டெண்டுல்கர் பாராட்டத் தவறவில்லை. "நெருக்கடியான சூழலில், மன உறுதியுடனும், அர்ப்பணிப்புடனும் பேட்டிங் செய்த ஆகாஷ் தீப்பிற்கு முழு மதிப்பெண்கள். தொடர்ந்து போராடுங்கள், இந்தியா" என்று சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டு பாராட்டியுள்ளார்.
இந்த இரு இளம் வீரர்களின் அபார ஆட்டத்தைத் தொடர்ந்து, ரவீந்திர ஜடேஜா 53 ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 53 ரன்கள் எடுத்து கடந்த அதிரடி அரைசதங்களாலும், துருவ் ஜுரலின் 34 ரன்கள் பங்களிப்பாலும், இந்திய அணி இங்கிலாந்துக்கு 374 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இலக்கைத் துரத்தத் தொடங்கிய இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜாக் கிராலியை, ஆட்டத்தின் கடைசி ஓவரில் முகமது சிராஜ் வீசிய அபாரமான யார்க்கர் மூலம் போல்டாக்கி, இந்தியாவிற்கு ஒரு முக்கியமான விக்கெட்டைக் கைப்பற்றிக் கொடுத்தார்.
இங்கிலாந்து அணி வெற்றி பெற இன்னும் 324 ரன்கள் தேவைப்படும் நிலையில், கிறிஸ் வோக்ஸ் காயம் காரணமாக வெளியேறியுள்ளதால், இந்திய அணிக்கு வெற்றி பெற 9 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்படலாம். சச்சினின் பாராட்டுகளுடன், இந்திய அணி இந்த போட்டியில் வெற்றி வாகை சூடுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.