IND vs ENG: உலகிலேயே எந்த வீரரும் செய்யாத பிரம்மாண்ட டி20 சாதனை.. ரெக்கார்டை உடைத்த அபிஷேக் சர்மா
மும்பை: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம் ஆடி 37 பந்துகளில் சதம் அடித்தார். மேலும் 17 பந்துகளில் அவர் அரைசதம் கடந்து இருந்தார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை அடித்து நொறுக்கி இருக்கிறார்.
மேலும், உலக அளவில் குறைந்த ஓவர்களில் சதம் அடித்த வீரர் என்ற பிரம்மாண்ட டி20 சாதனையை செய்து இருக்கிறார் அபிஷேக் சர்மா. மேலும், பல்வேறு சாதனைகளை அவர் செய்து இருக்கிறார். அவற்றை இங்கே பார்க்கலாம்.

இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அபிஷேக் சர்மா 4.2 ஓவர்களிலேயே 17 பந்துகளில் அரை சதம் அடித்தார். அதன் மூலம் டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிவேகமாக 50 ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன் யுவராஜ் சிங் 2007 டி20 உலகக் கோப்பையில் 12 பந்துகளில் அரை சதம் அடித்து இருந்தார். அதுவே டி20 போட்டிகளில் இன்றளவும் உலக சாதனையாக உள்ளது. தற்போது அபிஷேக் சர்மா அந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
அரை சதம் அடித்ததற்கு பின்னரும் அதே வேகத்தில் ஆடிய அபிஷேக் சர்மா பத்து சிக்ஸ் மற்றும் ஐந்து ஃபோர் அடித்து 37 பந்துகளில் தனது இரண்டாவது டி20 சதத்தை நிறைவு செய்தார். அவர் 10.1 ஓவரில் சதத்தை நிறைவு செய்தார். சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த ஓவர்களிலேயே சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையை படைத்தார் அபிஷேக் சர்மா.
இதற்கு முன் 2023இல் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10.2 ஓவர்களில் சதம் அடித்து இருந்தார். அந்த சாதனையை உடைத்து இருக்கிறார் அபிஷேக் சர்மா.
இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் செய்தார் அபிஷேக் சர்மா. இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பின்ச் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 47 பந்துகளில் சதம் அடித்து இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதமடித்து அந்த சாதனையை உடைத்து இருக்கிறார்.
மேலும், இந்தப் போட்டியில் இந்திய அணி 6.3 ஓவர்களிலேயே 100 ரன்களை எட்டி சாதனை படைத்தது. இதுவே இந்திய அணியின் விரைவான 100 ரன்கள் ஆகும். பவர் பிளே ஓவர்களில் மட்டுமே அபிஷேக் சர்மா 58 ரன்களை சேர்த்து இருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் பவர் பிளே ஓவர்களில் அதிக ரன்கள் குவித்த சாதனையை செய்தார் அபிஷேக் சர்மா. இதற்கு முன் ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 2023ஆம் ஆண்டு பவர் பிளே ஓவர்களில் 53 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. அதை முறியடித்து இருக்கிறார் அபிஷேக் சர்மா.
மேலும் இந்திய அணிக்காக விரைவாக டி20 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த இடத்தை பிடித்து இருக்கிறார். ரோஹித் சர்மா 35 பந்துகளில் டி20 சதத்தை அடித்து இருந்தார். தற்போது அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
சர்வதேச அளவில் அதிவேக டி20 சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் டேவிட் மில்லர் மற்றும் ரோஹித் சர்மா 35 பந்துகளில் சதம் அடித்து முதல் இடத்தில் உள்ளனர். அபிஷேக் சர்மா 37 பந்துகளில் சதம் அடித்து மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 135 ரன்கள் சேர்த்தார்.
IND vs ENG: யுவராஜ் சந்தோசப்படுவார் என நினைக்கிறேன்.. 150 கிமீ வேக பந்தை அடித்தது எப்படி- அபிஷேக்
இதுவே இந்திய வீரர் ஒருவர் சர்வதேச டி20 போட்டிகளில் அடித்த அதிகபட்ச ரன் ஆகும். மேலும், இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா 13 சிக்ஸ் அடித்ததே இந்திய வீரர் ஒருவர் ஒரே சர்வதேச டி20 போட்டியில் அடித்த அதிகபட்ச சிக்ஸ் எண்ணிக்கை ஆகும்.
அபிஷேக் சர்மாவின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி 20 ஓவர்களில் 247 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 97 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


Click it and Unblock the Notifications