ராஜ்கோட் : டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம், அரைசதம் விளாசுவதற்காக சக வீரர்களை ரன் அவுட் செய்வதை இந்திய அணியின் ரவீந்திர ஜடேஜா வழக்கமாக்கி வருவது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்களை குவித்துள்ளது. 33 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்த போது, ரோகித் சர்மா - ஜடேஜா இருவரும் 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 196 பந்துகளில் 131 ரன்கள் சேர்த்து அசத்தினார். தொடர்ந்து இன்னொரு பக்கம் சிறப்பாக ஆடிய ரவீந்திர ஜடேஜா ஆட்ட நேர முடிவில் 110 ரன்களுடன் களத்தில் உள்ளார்.

ஆனால் முதல் நாள் ஆட்டத்தின் நாயகனாக அறிமுக வீரர் சர்பராஸ் கான் அமைந்துள்ளார். ரோகித் சர்மா ஆட்டமிழந்த பின் அடுத்தடுத்து வரும் வீரர்களை எளிதாக வீழ்த்திவிடலாம் என்று இங்கிலாந்து வீரர்கள் எண்ணிய போது, திடீரென இங்கிலாந்து அணியின் 3 ஸ்பின்னர்களை பொளந்து கட்டினார் சர்பராஸ் கான். அதிரடியாக ரன்களை சேர்த்த சர்பராஸ் கான் 47 பந்துகளில் அரைசதம் கடந்து சாதனை படைத்தார். அறிமுகமான முதல் போட்டியிலேயே அரைசதம் விளாசிய அவர், சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 99 ரன்களில் இருந்த போது சதமடிக்க வேண்டும் என்று ஆர்வத்தில் ஜடேஜா செய்த தவறால், அறிமுக வீரர் சர்பராஸ் கான் 66 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ரன் அவுட்டாகி வெளியேறினார். இதனால் ஓய்வறையில் நின்று பார்த்து கொண்டிருந்த கேப்டன் ரோகித் சர்மா தொப்பியை தூக்கி எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினார். சொந்த சாதனைக்காக ஜடேஜா இப்படி எதிர்முனையில் நின்றிருக்கும் வீரர்களின் விக்கெட் காவு கொடுப்பது இது முதல்முறையல்ல.
2020ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் ரகானே சதம் விளாசி சிறந்த ஆட்டத்தை விளையாடி கொண்டிருந்தார். அவருக்கு உறுதுணையாக ஆடிய ஜடேஜா 49 ரன்களில் இருந்த போது, அரைசதத்தை எடுக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டினார். அப்போதும் ரகானே 112 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். அதுவும் ஜடேஜாவின் தவறு தான். ஆனால் அதனை மனதில் வைக்காமல் ரகானே, உடனடியாக சென்று எந்த தவறும் இல்லை என்று கூறி ஆறுதல் கூறி பெவிலியன் திரும்பினார்.
வழக்கமாக வேகமாக ஓடும் ஜடேஜா, எதிர் முனையில் நின்றிருக்கும் வீரர்களை பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. டெய்லெண்டர்கள் பேட்டிங் செய்தாலும் முதல் பந்திலேயே ஒரு ரன்னை எடுத்து எதிர்முனைக்கு சென்றுவிடுவார். சீனியர் வீரரான ஜடேஜா இப்படி சொந்த சாதனைகளுக்காக விளையாடுவது ரசிகர்களிடையே விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.