Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

“முட்டாள்தனமான பேச்சு.. பும்ராவுக்கு இருப்பது சீரியஸான பிரச்சனை” முன்னாள் பவுலிங் கோச் விளாசல்

மும்பை: இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனக்கு விருப்பமான சில போட்டிகளில் மட்டும் விளையாடுகிறார், இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் அனைத்து போட்டிகளிலும் விளையாடவில்லை என்ற விமர்சனங்கள் சமீபகாலமாக எழுந்து வரும் நிலையில், "இவையெல்லாம் முட்டாள்தனமான பேச்சு" என்று இந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கடுமையாகச் சாடியுள்ளார்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடந்து முடிந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே பங்கேற்றார். பணிச்சுமை காரணமாக கடைசி மற்றும் முக்கியமான ஐந்தாவது டெஸ்ட் போட்டியிலிருந்து அவருக்கு ஓய்வளிக்கப்பட்டது.

IND vs ENG Bharath Arun Defends Jasprit Bumrah and Calls Criticism on workload Stupid

இது, சில முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. பிசிசிஐ கூட, வீரர்கள் போட்டிகளைத் தேர்வு செய்து விளையாடுவதை இனி அனுமதிக்காது என்று மறைமுகமாக பும்ராவைக் குறிப்பிட்டதாக செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், பும்ராவுக்கு ஆதரவாக பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் களமிறங்கியுள்ளார். பும்ராவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவரான பரத் அருண், இதுகுறித்து காட்டமாகப் பேசியுள்ளார்.

காயம் மிகவும் தீவிரமானது!

இதுபற்றி தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பரத் அருண், "பும்ராவுக்கு எதிராக இதுபோன்ற பேச்சுக்கள் எழுவதைக் கேட்கவே வருத்தமாக இருக்கிறது. அவருக்கு முதுகுப் பகுதியில் மிகத் தீவிரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்துவிட்டது, இனி அவர் எப்போதுமே நலமாக இருப்பார் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. இப்போது அவரது முதுகில் உள்ள காயம் மிகவும் தீவிரமானது" என்று விளக்கமளித்துள்ளார்.

போட்டிகளைத் தேர்வு செய்கிறாரா?

பும்ரா போட்டிகளைத் தேர்வு செய்து விளையாடுகிறார் என்ற குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்த பரத் அருண், "இது போட்டிகளைத் தேர்வு செய்வதல்ல. சில மாதங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியாவில் உலகின் சிறந்த பந்துவீச்சாளர் என்று புகழப்பட்டார். இப்போது அவர் மீது அநியாயமாக விமர்சனம் வைக்கப்படுகிறது" என்றார்.

மேலும், "இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே அவர் 3 போட்டிகளில் தான் விளையாடுவார் என்று ஏன் அறிவிக்கப்பட்டது தெரியுமா? இது போன்ற முட்டாள்தனமான பேச்சுகளைத் தடுப்பதற்குத்தான்" என்றும் பரத் அருண் குறிப்பிட்டார்.

"இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகளில் அவர் சரியாக விளையாடவில்லையா? இரண்டு முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது உடல்நிலை இப்போது அப்படித்தான் இருக்கிறது. நாம் கவனமாக இருந்து, அவர் இந்திய அணிக்காக விளையாடும் இந்த முயற்சியைப் பாராட்ட வேண்டும்," என்றும் பரத் அருண் கூறினார்.

இந்திய அணிக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்த பும்ரா போன்ற ஒரு முக்கிய வீரர் மீது, அவரது காயம் மற்றும் பணிச்சுமையைப் புரிந்து கொள்ளாமல் வைக்கப்படும் விமர்சனங்கள் நியாயமற்றது என்பதே பரத் அருண் போன்ற கிரிக்கெட் வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. அதை ரசிகர்களும், சில முன்னாள் வீரர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

Story first published: Sunday, August 10, 2025, 14:54 [IST]
Other articles published on Aug 10, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+