ஐதராபாத் : ஐதராபாத் மைதானத்தில் எப்படி ஃபீல்ட் செட்டப் அமைக்க வேண்டும் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை பார்த்தே கற்றுக் கொண்டதாக இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் பின் தங்கிய போது இரண்டாவது இன்னிங்ஸில் அபார எழுச்சியை பெற்று வரலாறு படைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்திய மண்ணில் கேப்டனாக களமிறங்கிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே பென் ஸ்டோக்ஸ் வெற்றியை ஈட்டியுள்ளார்.

இதன் மூலம் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை பெற்றுள்ளது. சொந்த மண்ணில் 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெற்றும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் பேஸ் பால் குறித்து விவாதிக்க தொடங்கியுள்ளனர்.
இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், நான் கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதில் இருந்து ஏராளமான சிறந்த வெற்றிகளையும், காட்சிகளையும் கண்டுள்ளோம். தோல்வியடைந்தாலும், அந்த ஆட்டம் சுவாரஸ்யமானதாக இருந்துள்ளது. ஆனால் இந்திய அணிக்கு எதிரான இந்திய மண்ணில் மிகச்சிறந்த வெற்றியை பெற்றுள்ளோம். இங்கிலாந்து அணியின் மிகச்சிறந்த வெற்றியாக இதனை கருதுகிறேன்.
இந்திய மண்ணில் முதல்முறையாக கேப்டனாக களமிறங்குகிறேன். எப்போதும் ஆட்டத்தில் என்ன நடக்கிறது என்பதை உற்று கவனிப்பேன். முதல் இன்னிங்ஸில் ஃபீல்டிங் செய்த போது ஏராளமானவற்றை கற்றுக் கொள்ள முடிந்தது. எப்படி இந்திய ஸ்பின்னர்கள் பவுலிங் செய்தார்கள், ரோகித் சர்மா எப்படி ஃபீல்ட் செட் அமைக்கிறார் என்பதை கவனித்தேன். அதனை பவுலிங்கின் போது செயல்படுத்தினேன். இங்கிலாந்து அணியில் உள்ள ஒவ்வொரு வீரரின் செயல்பாடுகளும் மகிழ்ச்சியை கொடுக்கிறது.
டாம் ஹார்ட்லியின் 9 விக்கெட்டுகள், போப்பின் கம்பேக் இரண்டும் மிகச்சிறந்த ஆட்டம். டாம் ஹார்ட்லி முதல்முறையாக இங்கிலாந்து அணிக்குள் வந்துள்ளார். அவருக்கு நீண்ட ஸ்பெல் கொடுக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு அதிகளவு நம்பிக்கையை அளித்தோம். ஏதோ கட்டத்தில் நான் அவர் பக்கம் செல்வேன் என்று எனக்கு தோன்றியது.
இங்கிலாந்து அணிக்கு தேர்வான அத்தனை வீரர்கள் மீதும் முழு நம்பிக்கை உள்ளது. நானும், ஜோ ரூட்டும் ஆசிய மைதானங்களில் ஏராளமான கிரிக்கெட்டை விளையாடி இருக்கிறோம். ஆனால் போப் ஆடிய ஆட்டத்தை பார்த்து மிரண்டுவிட்டோம். ஸ்டீவ் ஷாட்ஸ் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட் மூலமாக இந்திய ஃபீல்டிங்கிற்கு ஏற்ப பேட்டிங் செய்தார் போப்.
இங்கிலாந்து பேட்ஸ்மேன்களில் ஆசிய மைதானங்களில் ஆடப்பட்ட இன்னிங்ஸ்களில் இதுதான் சிறந்தது என்று நிச்சயம் சொல்ல முடியும். நாங்கள் தோல்வியடைந்தாலும், நாளை காலை மீண்டும் நிச்சயம் சூரியம் வரத்தான் போகிறது. வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்காது. அதனால் தோல்வியை நினைத்து பயமில்லை. என்ன நடந்தாலும் வெற்றிக்காக முயற்சிக்க வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.