ராஞ்சி : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் 2வது நாளில் பிட்சில் நடந்த மாற்றத்தை கணிக்காமல் இந்திய அணி விளையாடியது பின்னடைவாக மாறியுள்ளது.
ராஞ்சி மைதானத்தின் பிட்ச் ரிப்போர்ட் வெளியான போதே இந்திய ரசிகர்கள் பலரும் பீதியடைந்தனர். ஏனென்றால் ராஞ்சி பிட்ச் 2வது நாளிலேயே ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறும் என்பதோடு, முதல் பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகமாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும் என்று பார்க்கப்பட்ட நிலையில், இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி ஜோ ரூட்டின் அபார சதத்தால் 353 ரன்களை குவித்தது. 2வது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 51 ரன்கள் சேர்த்து 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இங்கிலாந்து அணியின் கடைசி 3 விக்கெட்டுகளையும் இந்திய அணியின் ஜடேஜாவே வீழ்த்தினார். அப்போதே பிட்சில் அதிகளவில் விரிசல் விழுந்தது.
தொடர்ந்து இங்கிலாந்து ஸ்பின்னர்கள் ஸ்டம்ப் டூ ஸ்டம்ப் லைனில் அதிகளவு வீச தொடங்கினர். பின்னர் உணவு இடைவேளைக்கு பின் பிட்ச் முழுவதும் ஸ்பின்னர்களுக்கு சாதகமாக மாறியது. இதையடுத்து சோயப் பஷீர் தனது வேலையை காட்ட தொடங்கினார். அதேபோல் டாம் ஹார்ட்லியும் அவருக்கு உதவியாக ரன்களை ஒரு பக்கம் கட்டுப்படுத்த, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பிரஷர் அதிகமானது.
அதேபோல் விரிசல் விழுந்த பகுதிகளில் பந்து பிட்சாகும் சூழலில், கொஞ்சம் கூட பவுன்ஸ் ஆகாமல் தாழ்வாகவே வர தொடங்கியது. நன்றாக ஸ்பின்னர்களை எதிர்கொள்ளும் ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் உள்ளிட்ட வீரர்களுக்கு இது அபாயமாக மாறியது. எந்த இடத்தில் பிட்சாகி எப்படி வரும் பவுன்ஸாகும் என்பது புரியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் குழம்பினர்.
இதனால் சுப்மன் கில், ரஜத் பட்டிதர், ஜடேஜா, சர்பராஸ் கான் மற்றும் அஸ்வின் உள்ளிட்டோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஏற்கனவே இந்திய வீரர்கள் ஸ்பின் பிட்சில் பேட்டிங் செய்ய திணறி வருகின்றனர். இதனால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி குறைந்த ஸ்கோரில் ஆல் அவுட்டானால், 4வது டெஸ்ட் போட்டியில் தோல்வியடையும் சூழல் இந்திய அணிக்கு உருவாகும் என்று பார்க்கப்படுகிறது.