ராஜ்கோட் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இருந்து விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்டோர் முழுமையாக விலகிய நிலையில், இளம் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் மோசமான ஆட்டம் காரணமாக நீக்கப்பட்டார். அதேபோல் 2வது டெஸ்ட் போட்டிக்கு முன் காயமடைந்த கேஎல் ராகுல் 3வது டெஸ்டில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இந்திய அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பார்க்கப்பட்டது. அதன்படி, இந்திய அணியின் இளம் வீரர் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் இந்த போட்டியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். கேஎஸ் பரத் நீக்கப்பட்டு அவரது இடத்தில் விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டார். அதேபோல் இந்திய அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் சர்பராஸ் கான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
சர்பராஸ் கானுக்கு முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே டெஸ்ட் கேப் கொடுத்து வரவேற்ற நிலையில், துருவ் ஜுரெலுக்கு தமிழ்நாடு ஜாம்பவான் தினேஷ் கார்த்திக் டெஸ்ட் கேப் அணிவித்து வரவேற்றார். இதையடுத்து டாஸ் போடப்பட்ட நிலையில், இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வென்று பேட்டிங்கை தேர்வு செய்வதாக அறிவித்தார். தொடர்ந்து ரோகித் சர்மா பேசுகையில், ஜடேஜா, சிராஜ் கம்பேக் கொடுத்துள்ளனர். அதேபோல் சர்பராஸ் கான் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்.
முகேஷ் குமார், அக்சர் படேல், கேஎஸ் பரத் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 டெஸ்ட் போட்டிகளை விடவும் இந்த பிட்ச் நன்றாக உள்ளது. ராஜ்கோட் எப்போதும் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். அணிக்கு தேவையான போது சரியான நேரத்தில் இளம் வீரர்கள் முன் நின்றிருக்கிறார்கள். கடந்த 2 போட்டிகளை விடவும் அடுத்த 3 டெஸ்ட் போட்டிகள் கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கும். அதனால் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
மேலும் பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், நாங்களும் முதல் பேட்டிங் செய்யவே விரும்பினோம். இந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் 2 அணிகளும் சிறப்பாக விளையாடி இருக்கின்றன. கடந்த 10 நாட்களாக சிறந்த ஓய்வு கிடைத்தது. கிரிக்கெட் பயிற்சி இல்லாமல் குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டோம். டெஸ்ட் போட்டிகளில் வெல்வதற்கு பல்வேறு வாய்ப்புகள் கிடைக்கும். இந்திய அணி கடந்த போட்டியில் மிகச்சிறந்த அதனை செய்தது. எங்கள் அணியில் ஒரு மாற்றம் என்று தெரிவித்தார்.
இந்திய அணி விவரம் : ரோகித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ரஜத் பட்டிதர், சர்பராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், பும்ரா, சிராஜ்.