மும்பை: இந்திய முன்னாள் கேப்டன் தோனி கூறிய வார்த்தைகளை மனதில் வைத்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது பேட்டிங் ஃபார்மை மீட்டெடுக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் விமர்சித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வென்ற நிலையில், 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வென்று பதிலடி கொடுத்தது. இருப்பினும் இரு போட்டிகளிலும் ரோகித் சர்மாவின் கேப்டன்சி விமர்சனத்திற்குள்ளானது. மொத்தமாக டிஃபென்சிவ் மனநிலையில் ரோகித் சர்மா விளையாடியது வெளிப்படையாக தெரிந்தது.

அதேபோல் பேட்டிங்கிலும் ரோகித் சர்மா மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார். தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடரிலேயே ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் கேள்விக்குறியாகிய நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 போட்டிகளிலும் 24, 39, 14, 13 என்று மொத்தமாகவே 90 ரன்களை சேர்த்துள்ளார். ஏற்கனவே விராட் கோலி இல்லாத சூழலில், கேப்டன் ரோகித் சர்மாவும் மோசமாக ஆடுவது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், ஒரு கேப்டனாக அனைத்து விஷயங்களும் சரியாக நடக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறார் ரோகித் சர்மா. ஆனால் மற்றவர்களை களத்திலேயே திட்டும் ரோகித் சர்மா, தனது பேட்டிங் ஃபார்மையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏனென்றால் இந்திய அணிக்கு பேட்ஸ்மேன் ரோகித் சர்மா இப்போது அதிகமாக தேவைப்படுகிறார். அது அவரின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. அதனை சரியாக செய்ய வேண்டும். ஆனால் கேப்டன்சி அப்படியல்ல. மற்ற வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும். ரோகித் சர்மா இப்போது தோனி கூறிய வார்த்தைகளை மனதில் வைக்க வேண்டும். எப்போது நமது பணியை சரியாக செய்தால், சில விஷயங்கள் தானாக நடக்கும்.
அதனால் ரோகித் சர்மா பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா மண்ணில் ரோகித் சர்மா எப்படியான பேட்டிங் அடிப்படையை பின்பற்றினாரோ, இந்தியாவிலும் அப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வழக்கமாக மும்பையை சேர்ந்த வீரர்களுக்கு அதிக ஆதரவளிக்கும் சஞ்சய் மஞ்ரேக்கர், அண்மை காலமாக ரோகித் சர்மாவை அதிகமாக விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.