தரம்சாலா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல்முறையாக இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் விளாசி சாதனை படைத்துள்ளனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி குல்தீப் யாதவ் மற்றும் அஸ்வின் சுழலில் சிக்கியதால், வெறும் 218 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. பேட்டிங்கிற்கு சாதகமான தரம்சாலா பிட்சில் இங்கிலாந்து அணி 218 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது.

அதனை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இரண்டாம் நாள் ஆட்டத்தில், மிகப்பெரிய பின்னடைவு என்று நிரூபித்தனர். 135 ரன்களுக்கு ஒரு விக்கெட் என்ற நிலையில், இந்திய அணியின் ஆட்டம் தொடங்கியது. முதல் செஷனில் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைந்து விக்கெட் கொடுக்காமல் 129 ரன்களை விளாசினார்கள்.
அதன்பின் ரோகித் சர்மா 103 ரன்களிலும், சுப்மன் கில் 110 ரன்களிலும் ஆட்டமிழக்க, பின்னர் வந்த அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் - சர்பராஸ் கான் இருவரும் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 4வது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த நிலையில் இளம் வீரர் சர்பராஸ் கான் 56 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் சிக்ஸ் அடித்து அரைசதம் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 400 ரன்களை கடந்தது. பின்னர் அவரும் 65 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் கடந்துள்ளனர். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் நேற்றைய ஆட்டத்திலேயே 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலமாக 92 வருட இந்திய டெஸ்ட் வரலாற்றில் இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் கடப்பது இதுவே முதல்முறையாகும்.
அதேபோல் 15 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியின் டாப் 5 பேட்ஸ்மேன்கள் அனைவரும் அரைசதம் விளாசி இருக்கிறார்கள். இதற்கு முன்பாக 1998ல் கொல்கத்தாவில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில், 1999ல் மொஹாலியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியிலும், 2009ஆம் ஆண்டு மும்பையில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் இந்திய டாப் 5 பேட்ஸ்மேன்கள் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.