நாக்பூர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அணியில் முன்னதாக ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பிசிசிஐ வெளியிட்டு இருக்கும் மாற்றப்பட்ட அணியில் அவரது பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது.
அவருக்கு பதிலாக சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தியின் பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19 அன்று துவங்க உள்ளது. அந்தத் தொடருக்கான இறுதிக்கட்ட அணியை பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் பிசிசிஐ அறிவிக்க வேண்டும்.

இதற்கு இடையே தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடருக்காக முன்பு அறிவிக்கப்பட்டு இருந்த அணியில் பும்ரா, முகமது ஷமி, ஹர்ஷித் ராணா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய நான்கு வேகப் பந்துவீச்சாளர்களின் பெயர் இடம் பெற்று இருந்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது பும்ராவுக்கு முதுகில் வலி ஏற்பட்டிருந்ததால் அவர் இந்த தொடரில் விளையாடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என பிசிசிஐ சுட்டிக்காட்டி இருந்தது. தற்போது பும்ராவின் பெயர் நீக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், இது தொடர்பாக பிசிசிஐ எந்த விளக்கமும் அளிக்கவில்லை.
இதை அடுத்து பும்ரா அடுத்து நடைபெற உள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் விளையாட மாட்டாரா? என்ற கேள்வி எழுந்து உள்ளது. இந்த அணியில் ஏற்கனவே ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் என நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.
தற்போது வருண் சக்கரவர்த்தி ஐந்தாவதாக சேர்க்கப்பட்டு இருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன் இவர்களில் ஒரு சுழல் பந்துவீச்சாளர் நீக்கப்படுவார்.