லீட்ஸ்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா மூன்று முக்கிய சாதனைகளை படைத்திருக்கிறார். இரண்டாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி பந்துவீச்சில் தடுமாறிய போதும், பும்ரா மட்டுமே சிறப்பாகப் பந்துவீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்து அணி இரண்டாம் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. இங்கிலாந்து அணியின் அந்த மூன்று விக்கெட்டுகளையும் பும்ரா தான் வீழ்த்தினார். இதன் மூலம் அவர் என்னென்ன சாதனைகள் செய்திருக்கிறார் என்று பார்க்கலாம்.
இந்தப் போட்டியில் ஜோ ரூட் 28 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் இதுவரை 10 முறை டெஸ்ட் கிரிக்கெட்டில் பும்ராவிடம் ஆட்டமிழந்திருக்கிறார். அதிலும் வெறும் 25 இன்னிங்ஸ்களில் அவரது விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார் பும்ரா.

இதன் மூலம் ஜோ ரூட்டின் விக்கெட்டை குறைந்த இன்னிங்ஸ்களில் 10 முறை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை பும்ரா செய்திருக்கிறார். இதற்கு முன் பேட் கம்மின்ஸ் ஜோ ரூட்டின் விக்கெட்டுகளை மொத்தம் 11 முறை வீழ்த்தியிருக்கிறார். அவர் 27 இன்னிங்ஸ்களில் ஜோ ரூட்டை பத்து முறை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். அதேபோல, ஜோஷ் ஹேசில்வுட் 31 இன்னிங்ஸ்களில் 10 முறை ஜோ ரூட்டை ஆட்டமிழக்கச் செய்திருந்தார். தற்போது பும்ரா 25 இன்னிங்ஸ்களில் ஜோ ரூட்டை பத்து முறை ஆட்டமிழக்கச் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
மேலும், இந்தப் போட்டியின் முதல் ஓவரில் ஜாக் கிராலி விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் 2021 ஆம் ஆண்டிலிருந்து முதல் ஓவரில் அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளராக மாறியிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகளில் முதல் ஓவரில் பும்ரா 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார்.
இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடா 7 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். மிட்செல் ஸ்டார்க்கும் 7 விக்கெட்டுகளுடன் இருக்கிறார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கெமர் ரோச் 6 விக்கெட்டுகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இதைத் தவிர்த்து, முக்கியமான சாதனை ஒன்றையும் செய்திருக்கிறார். SENA எனப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய ஆசிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் வாசிம் அக்ரமை முந்தி இருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா. இதற்கு முன் வாசிம் அக்ரம் 146 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். தற்போது பும்ரா முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 147 விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்திருக்கிறார்.