மான்செஸ்டர்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் 3வது இடத்திற்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார். இந்த இன்னிங்ஸில் 31 ரன்களை எடுத்த போது இந்திய ஜாம்பவான் ராகுல் டிராவிட் மற்றும் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் ஜாக் காலிஸ் ஆகியோரின் சாதனையையும் முறியடித்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டர் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 358 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் சாய் சுதர்சன், ஜெய்ஸ்வால் மற்றும் ரிஷப் பண்ட் ஆகிய மூவரும் அரைசதம் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதன்பின் களமிறங்கிய இங்கிலாந்து அணி 2வது நாள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 225 ரன்களை எடுத்திருந்தது. இந்த நிலையில் 3வது நாள் ஆட்டத்தின் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் - போப் கூட்டணி நிதானமாக ரன்களை குவித்தது. இவர்களை வீழ்த்த இந்திய பவுலர்கள் போராடிய போதும், விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. உணவு இடைவேளை வரை இங்கிலாந்து ஸ்கோர் 332 ரன்களாக இருந்தது.
சிறப்பாக ஆடி வரும் ஜோ ரூட் தனது 67வது அரைசதத்தை நிறைவு செய்தார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 ரன்களுக்கு மேல் அதிக முறை அடித்த வீரர்கள் பட்டியலில் ஜோ ரூட் 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள், 68 அரைசதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். சதங்களோடு கணக்கிட்டால் ஜோ ரூட்டின் 104வது அரைசதம் இதுவாகும்.
அதேபோல் அதிக ரன்கள் அடித்த வீரர்களில் ஜோ ரூட் 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட் 13,288 ரன்களுடன் 4வது இடத்திலும், ஜாக் காலிஸ் 13,289 ரன்களுடன் 3வது இடத்தில் இருந்தனர். இந்த இன்னிங்ஸில் 31 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஜோ ரூட் 13,290 ரன்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
இந்த போட்டியிலேயே இன்னும் 88 ரன்கள் சேர்த்தால் ரிக்கி பாண்டிங்கின் 13,378 ரன்கள் சாதனையையும் ஜோ ரூட்டால் முறியடிக்க முடியும். இதனால் சச்சின் டெண்டுல்கருக்கு பின் ஜோ ரூட் இருப்பதாக பார்க்கப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் ஜோ ரூட் உச்சக்கட்ட ஃபார்மில் இருப்பதால், சச்சின் டெண்டுல்கரின் அதிக ரன்களை சாதனையை முறியடிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 15,921 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிக்க ஜோ ரூட்டிற்கு இன்னும் சுமார் 2,700 ரன்கள் தேவையாக இருக்கும் நிலையில், இன்னும் 2 ஆண்டுகள் இதே ஃபார்மில் ஆட வேண்டும் என்று பார்க்கப்படுகிறது.