மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று விரும்புகிறீர்கள் என கேள்வி கேட்கப்பட்டதற்கு கெவின் பீட்டர்சன் கோபமடைந்தார். நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் ரோஹித் சர்மா 32 ரன்களும், விராட் கோலி 190 ரன்களும் எடுத்தனர்.
இதனால் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் பீட்டர்சன், இந்த இரண்டு வீரர்களும் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது.

இருவரும் கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய ஜாம்பவான்கள். ரசிகர்களுக்கு பெரிய அளவு பொழுதுபோக்கை கொடுத்திருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இந்த இரண்டு வீரர்களுமே இன்னும் இரண்டு ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடக் கூடும். அதிலும் விராட் கோலி இந்தியா உருவாக்கியது மிகச்சிறந்த சேஸர். உலகத்திலே விராட் கோலியை மாதிரி ஏதேனும் சிறந்த சேஸர் யாராவது இருக்கிறார்களா?
விராட் கோலியை விட இந்தியாவுக்கு அதிக போட்டிகளை வென்று கொடுத்த வீரர்கள் யாராவது இருக்கிறார்களா? அவருக்கான நாளில் விராட் கோலி ஃபார்முக்கு திரும்பி சிறப்பாக விளையாடுவார். எனக்கு விராட் கோலி,ரோஹித் சர்மா இருவருமே பிடிக்கும் ரோஹித் சர்மா அணிக்கு வந்தது எனக்கு இன்னும் நினைவுக்கு இருக்கின்றது.
ரோகித் சர்மா மீது ஆரம்பத்தில் இப்படித்தான் விமர்சனங்கள் வைத்தார்கள்.ஆனால் அவர் தான் ஒரு ஸ்பெஷலான வீரர் என்பதை நிரூபித்து விட்டார். ரோகித் சர்மாவை இந்திய அணி பத்திரமாக கையாள வேண்டும். ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதையும் பாருங்கள்.ஆஸ்திரேலியாவுக்கு சென்று அவர் ஆடிய ஆட்டங்கள் எல்லாம் சிறந்த ஒன்று.
ஆஸ்திரேலியாவுக்கு சென்று அங்கு வீசப்படும் வேக பந்து வீச்சை சிக்ஸர்களுக்கு விரட்டியது எல்லாம் யாராலும் மறக்க முடியாது. உங்களது பந்தை சிக்ஸருக்கு அடிப்பேன் என்று சொல்லியே ரோகித் சர்மா விளையாடுவார். ரோகித் சர்மா ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை மிகச் சிறந்த வீரராகவே இருக்கின்றார் என்று பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.