ஐதராபாத்: இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதத்தை தவறவிட்டது குறித்து கவலைப்படவில்லை என்று நட்சத்திர கிரிக்கெட் வீரர் கே எல் ராகுல் கூறியிருக்கிறார். ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
இந்திய அணி இரண்டாவது நாள் ஆட்ட நேரம் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 421 ரன்கள் எடுத்துள்ளது. இது இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 175 ரன்கள் அதிகமாகும். இந்த நிலையில் போட்டி குறித்து பேசிய கே எல் ராகுல், இந்த ஆடுகளத்தில் எப்படி விளையாடுவது என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் தம் ஆலோசித்து தன்னுடைய யுக்திகளை வகுத்துக் கொண்டதாக கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய அவர் தென்னாப்பிரிக்காவில் சதம் அடித்தவுடன் அது நம்பிக்கையை அதிகரித்தது. காயத்திலிருந்து குணமடைந்த பிறகு தற்போது ஆறு ,ஏழு மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் விளையாடி வருகிறேன். களத்தில் பாசிட்டிவாக நின்று ரன் சேர்க்க வேண்டும். நான் தென்னாப்பிரிக்காவில் விளையாடிய ஆடுகளத்தை விட இது முற்றிலும் மாறுபட்டது.
பந்து கொஞ்சம் மெதுவாக தான் பேட்டிற்கு வந்தது. அது கொஞ்சம் சவாலாக தான் இருந்தது. எனக்கு வாய்ப்பு வரும்வரை நான் காத்திருந்து ஷார்ட்டுகளை விளையாடினேன். டாப் ஆர்டரில் ரன்களை சேர்த்து விளையாடியது குறித்து மகிழ்ச்சி அளித்தது. தற்போது நடுவரிசையில் விளையாடுவதும் நன்றாக தான் இருக்கிறது. மிடில் ஆர்டரில் விளையாடும்போது நமக்கு சிறிது நேரம் கொஞ்சம் ஓய்வு கிடைக்கும்.
பந்து எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்க நேரம் கிடைக்கும். பவுலர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை பார்த்து நமது இன்னிங்சை எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்து திட்டத்தை வகுக்க வாய்ப்பு கிடைக்கும். தற்போது இரண்டு நாட்கள் தான் முடிவடைந்து இருக்கிறது. மூன்றாவது நாள் முழுவதும் கூட நாங்கள் பேட்டிங் செய்ய முடிந்தால் செய்வோம்.
எவ்வளவு ரன்கள் அடிக்க முடியுமோ அவ்வளவு ரன்கள் அடிப்பது தான் தற்போது அணியின் திட்டமாக இருக்கிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து விளையாடும் போது எடுத்த உடனே அதிரடியாக விளையாடி ஆட்டமிழந்தார்கள். அந்த தவறை செய்யக்கூடாது என்பதில் நான் தெளிவாக இருந்தேன். முதலில் பொறுமை காத்து வாய்ப்பு கிடைக்கும் போது ரன்களை சேர்க்க வேண்டும். எந்த பந்தை விடுவது எந்த பந்தை அடிப்பது என்று தேர்வு செய்வதில் தான் ஆட்டமே இருக்கிறது என்று கேல் ராகுல் கூறியுள்ளார்.