மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவில் சர்பிராஸ்கான் சேர்க்கப்பட்டது தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் ஹாட் டாபிக்காக பேசப்படுகிறது. ஏனென்றால் இப்படி ஒரு செய்தி வராதா என்று இந்திய ரசிகர்கள் பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் சின்ன வயதில் இருந்தே தன்னுடைய திறமையை பல்வேறு கட்டத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
சர்பிராஸ்கான் தனது 12வது வயதில், முதன்முறையாக சச்சின் டெண்டுல்கர் விளையாடிய பள்ளி கிரிக்கெட் தொடரில் ஒரு போட்டியில் 439 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். பொதுவாக அண்டர் 19 கிரிக்கெட் உலக கோப்பையில் விளையாடுவதே மிகவும் கடினமாக இருக்கும். இந்த சூழலில் சர்பிராஸ்கான் இரண்டு முறை அண்டர் 19 உலக கோப்பை தொடரில் விளையாடி இருக்கிறார்.

இளம் வயதிலேயே பிரபலமானதால் சர்பிராஸ்கான் 16 வயது இருக்கும்போதே 2014 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற U19 உலக கோப்பையில் களமிறங்கினார். 6 போட்டிகளில் விளையாடிய சர்பிராஸ்கான் 211 ரன்கள் குவித்தார். அதன் பிறகு மீண்டும் வங்கதேசத்தில் நடைபெற்ற அண்டர் 19 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 355 ரன்கள் சர்பிராஸ்கான் குவித்தார்.
இந்த நிலையில் சர்பிராஸ்கான் உடன் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய மற்ற அணி வீரர்கள் எல்லாம் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை தற்போது பார்க்கலாம். சர்பிராஸ்கானுடன் அண்டர் 19 கிரிக்கெட்டில் விளையாடிய ரஷீத் கான் இன்று உலகின் மிகச்சிறந்த சுழற் பந்துவீச்சாளராக உருவெடுத்து இருக்கிறார். உலகம் முழுவதும் நடைபெறும் பல கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி பெயர் பெற்றுள்ள ரஷீத் கான் ஆப்கானிஸ்தான் அணியின் முக்கிய வீரராக விளங்குகிறார்.
சர்பிராஸ்கான் உடன் விளையாடிய இங்கிலாந்து வீரர் பெண் டக்கட் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த அணியின் முக்கிய வீரராக விளங்கி வருகிறார். பென் டக்கட் விளையாடிய சில போட்டிகளிலே பல சிறப்பு மிக்க இன்னிங்ஸ்களை விளையாடியிருக்கிறார். சர்பிராஸ்கான் உடன் விளையாடிய பாகிஸ்தான் வீரர் சதாப்கான் தற்போது அந்த அணியின் தூண்களில் ஒருவராக இருக்கிறார். கேப்டன் துணை கேப்டன் என பல பொறுப்புகளையும் சதாப்கான் பாகிஸ்தான் அணியில் வகித்துவிட்டார்.
சர்பிராஸ்கான் உடன் விளையாடிய ரச்சின் ரவீந்திரா இன்று நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் சூப்பர் ஸ்டார் ஆக விளங்குகிறார். நடந்து முடிந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரச்சின் ரவீந்திரா 500 ரன்கள் குவித்து இளம் வயதிலேயே உலக கோப்பையில் அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். சர்பிராஸ்கான் உடன் விளையாடிய அல்சாரி ஜோசப் இன்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முக்கிய வேகப்பந்துவீச்சாளராக விளக்குகிறார். பல லீக் டி20 போட்டிகளிலும் அல்சாரி ஜோசப் விளையாடிய அனுபவம் கொண்டவராக இருக்கிறார். சர்பிராஸ்கானுடன் விளையாடிய பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் தற்போது அந்த அணியில் நல்ல பேட்ஸ்மேன் ஆக விளங்கி வருகிறார்.
சர்பிராஸ்கான் உடன் விளையாடிய சாம்கரன் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார். டி20, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சாம்கரன் ஸ்டார் வீரராக விளங்கி வருகிறார். மேலும் ஐபிஎல் போன்ற தொடரிலும் சாம்கரனுக்கு நல்ல மவுசு இருக்கிறது. கடந்த டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் சாம்கரனும் ஒருவர். இந்தப் பட்டியலில் மிகவும் முக்கியமான இடத்தை பிடித்திருப்பவர் ரபாடா. சர்பிராஸ்கானுடன் 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய ரபாடா இன்று உலக கிரிக்கெட்டில் மிக முக்கியமான வேகப்பந்துவீச்சாளராக இருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி ஜாம்பவான் அந்தஸ்தை பெற்றுள்ள ரபாடா 200 சர்வதேச போட்டிகள் மேல் விளையாடி இருக்கிறார். சர்பிராஸ்கானுடன் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் சிம்ரன் ஹிட் மேயர் தற்போது அந்த அணியின் ஸ்டார் பேட்ஸ்மேனாக இருக்கிறார். அது மட்டும் அல்லாமல் ஹெட்மயர் தற்போது பல டி20 லீக் அணிக்காகவும் விளையாடி இருக்கிறார். சிம்ரன் ஹெட்மயர் உலகில் உள்ள அதிரடி பேட்ஸ்மேன்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். இதேபோன்று சர்பிராஸ்கான் உடன் விளையாடிய எய்டன் மார்க்கரம் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் என்ற அந்தஸ்தில் உயர்ந்திருக்கிறார்.
தென்னாப்பிரிக்காவுக்காக பல இன்னிங்ஸ்களில் விளையாடி பெயர் வாங்கி இருக்கிறார். இப்படி சர்பிராஸ் கானுடன் விளையாடிய வீரர்களுக்கு முன்பே வாய்ப்பு கிடைத்து தற்போது ஒவ்வொருவரும் அந்த அணிக்கு சூப்பர் ஸ்டார் ஆக இருக்கிறார்கள். ஆனால் சர்பிராஸ்கான் இவ்வளவு சதம் அடித்தும் தற்போது 26 வது வயதில் தான் முதல் முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதிலும் அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்குமா என்பதில் இன்னும் சந்தேகம் நிலவுகிறது. ரபாடா போன்ற வீரர்கள் எல்லாம் 200 சர்வதேச போட்டிகளில் விளையாடிய நிலையில் சர்பிராஸ்கான் முதல் போட்டி விளையாடவே வாய்ப்பு கிடைக்கவில்லை.