தரம்சாலா : இந்திய அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி தரம்சாலாவில் நடக்கவுள்ளது. இதுவரை முடிவடைந்த 4 டெஸ்ட் போட்டிகளில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. ராஞ்சி மைதானத்தில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற போதும், இங்கிலாந்து அணியால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் வானிலையை ஒத்திருக்கும் தரம்சாலாவில் ஆறுதல் வெற்றியை பெறுவதற்காக இங்கிலாந்து அணி தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது. அதேபோல் கடைசி டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். தோல்வி பற்றி அச்சமில்லை என்று கூறும் வகையில், மீண்டும் போட்டிக்கு ஒருநாள் முன்பாக அணியை அறிவித்துள்ளனர்.
5வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேகப்பந்துவீச்சாளர் ராபின்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் களமிறங்கிய ராபின்சன் முதல் இன்னிங்ஸில் ஜோ ரூட்டுக்கு பேட்டிங்கில் நல்ல கம்பெனி கொடுத்து 58 ரன்களை விளாசினார். இதன் காரணமாக இங்கிலாந்து அணியால் 300 ரன்களை கடக்க முடிந்தது.
இருப்பினும் ராபின்சன் எதிர்பார்த்த அளவிற்கு பவுலிங்கில் செயல்படவில்லை. முதல் இன்னிங்ஸில் 13 ஓவர்கள் வீசி 54 ரன்களை விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை. அதேபோல் 2வது இன்னிங்ஸில் ராபின்சன் பவுலிங் செய்யவே அழைக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் கொடுத்த எளிய கேட்சை கோட்டைவிட்டார்.
இதனால் ராபின்சனை நீக்கிவிட்டு மார்க் வுட்டை பென் ஸ்டோக்ஸ் கொண்டு வந்துள்ளார். இந்த தொடரில் 2 போட்டிகளில் விளையாடியுள்ள மார்க் வுட் இதுவரை 4 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அதுவும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் மொத்தமாக வீழ்த்தியது தான். ஆனால் தரம்சாலா மைதானத்தில் மார்க் வுட் வேகம் மற்றும் ஸ்விங் இங்கிலாந்து அணிக்கு பலனளிக்கும் என்பதால், மீண்டும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து பிளேயிங் லெவன் : ஜாக் கிராலி, பென் டக்கெட், போப், ஜோ ரூட், பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன், சோயப் பஷீர்