கட்டாக்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இந்தத் தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் கே.எல். ராகுல் ஆறாம் வரிசையில் தான் பேட்டிங் செய்தார். சில போட்டிகளுக்கு இந்த மாற்றம் சரியாக இருந்தாலும் முக்கியமான போட்டியின் போது இந்திய அணியின் இந்த திட்டம் சொதப்பிவிடும் என கூறி பயிற்சியாளர் கௌதம் கம்பீரை எச்சரித்து இருக்கிறார் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்.
இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தயாராகி வருகிறது. அதற்கு முன் நடைபெறும் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் பேட்டிங்கில் முக்கிய பரிசோதனை முயற்சி நடந்து வருகிறது. அதன்படி ஐந்தாம் வரிசையில் கே.எல். ராகுலை ஆட வைப்பதற்கு பதிலாக அக்சர் பட்டேல் களம் இறக்கப்பட்டு வருகிறார்.

இதுவரை நடந்த இரண்டு போட்டிகளிலும் அக்சர் பட்டேல் சிறப்பாகவே பேட்டிங் ஆடினார். ஒரு அரை சதம் அடித்தார், மற்றொரு போட்டியில் 41 ரன்கள் சேர்த்தார். அதே சமயம், ராகுல் சரியாக ரன் சேர்க்கவில்லை. அவரது தன்னம்பிக்கை குறைந்து இருப்பதாக விமர்சனம் எழுந்து உள்ளது. இதை சுட்டிக்காட்டி ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.
ஸ்ரீகாந்த் பேசியதாவது - "ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். அது இந்திய அணிக்கு நல்ல விஷயம். ஆனால் நான் கே.எல். ராகுலை பற்றி தான் கவலைப்படுகிறேன். இது துரதிஷ்டவசமானது. அக்சர் பட்டேல் 30 ரன், 40 ரன் என அடிக்கிறார். அது நல்ல விஷயம் தான். ஆனால் கே.எல். ராகுலுக்கு நடப்பது நியாயமே இல்லை. அவரது ரெக்கார்டை எடுத்துப் பாருங்கள். ஐந்தாம் வரிசையில் அவர் சிறப்பாக ஆடி இருக்கிறார்."
"ஏய் கௌதம் கம்பீர், நீ செய்வது சரியில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த மாற்றம் செய்யப்படுகிறது. அக்சர் பட்டேலை ஐந்தாம் வரிசையில் இறக்குகிறீர்கள். ஆனால் இது நிலையான ஒரு வியூகமாக இருக்க முடியாது. இதே போன்ற மாற்றங்களை தொடர்ந்து செய்து கொண்டிருந்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்கு தெரியும். ஒரு முக்கியமான போட்டியின் போது எல்லாமே சொதப்பிவிடும்."
"அக்சர் பட்டேல் ஐந்தாம் வரிசையில் ஆடுவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. அவர் தனது வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்கிறார். ஆனால் ராகுலை பேட்டிங் வரிசையில் கீழே ஆட வைப்பதற்கு பதிலாக ரிஷப் பண்டை ஆறாம் வரிசையில் ஆட வைக்கலாம். ஏனென்றால் நீங்கள் ராகுலின் தன்னம்பிக்கையை உடைக்கிறீர்கள். உலக கிரிக்கெட்டில் சிறப்பாக ஆடி இருக்கும் ஒரு வீரருக்கு இதுபோல செய்வது சரியா?" என ஸ்ரீகாந்த் கேள்வி எழுப்பி இருக்கிறார்.